இலாகா ஒதுக்கீட்டில் எந்த குழப்பமும் இல்லை குமாரசாமி பேட்டி

இலாகா ஒதுக்கீட்டில் எந்த குழப்பமும் இல்லை என்று குமாரசாமி கூறினார்.

Update: 2018-06-05 22:30 GMT

பெங்களூரு,

இலாகா ஒதுக்கீட்டில் எந்த குழப்பமும் இல்லை என்று குமாரசாமி கூறினார்.

எந்த குழப்பமும் இல்லை

பெங்களூரு மல்லேசுவரம் சவுடய்யா அரங்கத்தில் சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

கூட்டணி கட்சிகள் இடையே இலாகாக்கள் ஒதுக்கீடு முடிந்துவிட்டது. மின்சாரத்துறை தொடர்பான விவாதம் என்பது எங்களது உள்கட்சி விவகாரம். அதை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம். இலாகா ஒதுக்கீட்டில் எந்த குழப்பமும் இல்லை. காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்று இருக்கிறார்கள். அங்கு எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.

முழுமையாக தடை செய்ய...

எங்கள் கட்சியில் எம்.எல்.சி.க்களுக்கு மந்திரி பதவி வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எங்கள் உள்கட்சி பிரச்சினை. இதை பற்றி உங்களிடம் பேச முடியாது. சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, அவற்றை முழுமையாக தடை செய்ய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மரக்கன்றுகள் நடப்படுவதாக...

முன்னதாக நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவில் குமாரசாமி பேசியதாவது:–

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது நமது அனைவரின் கடமை ஆகும். நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்காவிட்டால் நிதானமாக அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக வி‌ஷத்தை கொடுத்துவிட்டு செல்கிறோம் என்று அர்த்தம் ஆகும். பழம், காய்கறி கடைகள் அல்லது வேறு எந்த கடைகளுக்கு சென்றாலும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை நாம் பார்க்க முடியும்.

தென்னை நார் குடிசை தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் விவசாயிகளின் பொருளாதார நிலை உயரும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். கிராமப்புறங்களில் இதுபோன்ற வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்கு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை சார்பில் 5 கோடி முதல் 10 கோடி வரை மரக்கன்றுகள் நடப்படுவதாக சொல்கிறார்கள். வனத்துறையின் வளர்ச்சி வெறும் காகிதத்தில் இருந்தால் மட்டும் போதாது. வனத்துறையின் வளர்ச்சி உண்மையாக களத்தில் இருக்க வேண்டும்.

வானிலை மாற்றங்கள்

பெங்களூருவில் 1970–ம் ஆண்டு வாக்கில் காலையில் ‘ஸ்வெட்டர்‘ இல்லாமல் வெளியே வர முடியாத நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறிவிட்டது. வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் ஏரிகள், மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

நமது முன்னோர்கள் கட்டிக்காத்த ஏரிகள் இன்று ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. அவற்றில் கட்டிடங்களை கட்டிக் கொண்டனர். வளர்ச்சி என்ற பெயரில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்காக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டன. அவற்றுக்கு மாற்றாக மரங்கள் நடும் பணி நடக்கவில்லை. இதில் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் கவனம் செலுத்தவில்லை.

இந்திரா காந்தி

1973–ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவலை தெரிவித்தார். ஆனால் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களின் வீட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

இதில் நடிகர் தர்‌ஷன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்