வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே அஞ்சல் ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம்

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-05 23:00 GMT
வேலூர், 

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு சார்பில் வேலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் பணியாற்றும் எழுத்தர்கள், தபால்காரர்கள், கிராமிய அஞ்சல் ஊழியர்கள், 4-ம் பிரிவு ஊழியர்கள் ஆகியோர் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே கடந்த மாதம் 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 15-வது நாளான நேற்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் முனிரத்தினம் முன்னிலை வகித்தார். பொருளாளர் செல்வகுமார் வரவேற்றார்.

அப்போது அவர்கள் கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் திருவேங்கடம், செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 274 கிராமிய அஞ்சலக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 104 கிளை அஞ்சலகம் மூடப்பட்டுள்ளது. இதனால், தபால் சேவை முடங்கி உள்ளது. மூட்டை, மூட்டையாக தபால்கள் தேங்கி உள்ளது. எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.

குடியாத்தம் அனைத்து கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் 7-வது ஊதிய குழு கமிட்டியின் ஊதிய உயர்வு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தக்கோரி குடியாத்தம் பகுதியில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சங்கத்தின் சார்பில் நேற்று மாலை அனைத்து தரப்பினர் ஆதரவுக்கோரி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் கோட்ட தலைவர் பாலதண்டாயுதம், கோட்ட செயலாளர்கள் அன்பழகன், மனோகரன், பெருமாள், அஞ்சல் 3-ம் பிரிவு கிளை தலைவர் சுப்பிரமணி, செயலாளர் நெடுஞ்செழியன், உதவி செயலாளர் எழில், அஞ்சல் 4-ம் பிரிவு கிளை தலைவர் ரகுநாதன், செயலாளர் ரவி உள்பட 250-க்கும் மேற்பட்டோர் குடியாத்தம் தலைமை தபால்நிலையம் அருகில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்