வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் 290 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் 290 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.;

Update: 2018-06-05 22:30 GMT
வேலூர்,

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்கள் அனைத்தும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்குச் சென்றடைய முகாம்கள் நடத்தி தகுதியானவர்களுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள அட்டையின் மூலம் மாற்றுத்திறனாளிகள் அரசு வழங்கும் 46 வகையான சலுகைகளை பெற முடியும்.

வேலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டையை பெற்று வருகின்றனர்.

அதன்படி இந்த மாதத்துக்கான சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி தலைமை தாங்கினார். பிசியோதெரபிஸ்ட் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். அதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 450 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

அவர்களில் தகுதியுடையவர்களை கண்டறிய எலும்பு முறிவு டாக்டர், கண் டாக்டர், காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள், குழந்தைகள் நலம், மன நலம் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டு விண்ணப்பதாரர்களை வரிசையாக பரிசோதனை செய்தனர்.

அதில் தகுதியுடைய 290 மாற்றுத்திறனாளிகளுக்கு நேற்று ஒரே நாளில் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் விண்ணப்பித்த சிலருக்கு மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை குறித்துக் கண்டறிவதில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மை கண்டறியப்படும். 40 சதவீதத்துக்கு மேல் ஊனத்தின் தன்மை காணப்பட்டால் அவர்களுக்கு அடுத்த மாதம் (ஜூலை) நடைபெறும் சிறப்பு முகாமில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்