ஓட்டலில் அறை எடுத்து தங்கி வாடகை கொடுக்காத போலி சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் வலைவீச்சு

ஒகேனக்கல்லில் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி ஓட்டலில் அறை எடுத்து தங்கிவிட்டு, வாடகை கொடுக்காதவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் அவரது தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-06-05 22:15 GMT
பென்னாகரம்,

திருவண்ணாமலை மாவட்டம் கனந்தம்பூண்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 63). இவருடைய மகன் பாஸ்கர் (33). இவர்கள் இருவரும் கடந்த மாதம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். அங்கு ஒரு ஓட்டலில் 11-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை அறை வாடகை எடுத்து தங்கினர். மசாஜூம் செய்துகொண்டனர். அப்போது பாஸ்கர், தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறியுள்ளார். இவர்கள் அறையை காலி செய்யும்போது வாடகையும் கொடுக்கவில்லை. மசாஜ் செய்து கொண்டதற்கும் பணம் கொடுக்கவில்லை.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பாஸ்கர் சப்-இன்ஸ்பெக்டர் இல்லை என்பதும், அவர் போலியாக சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி ஓட்டலில் தந்தையுடன் அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது. மேலும் பிரபல மோட்டார் சைக்கிள் திருடனான இவர் மீது பல போலீஸ் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்ததும், கர்நாடகாவில் ஒரு வழக்கில் இவர் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது.

மேலும் பாஸ்கர் மோட்டார் சைக்கிள்களை திருடி தந்தை ராஜேந்திரனிடம் ஒப்படைப்பதும், அவர் ஆர்.சி. உள்ளிட்ட ஆவணங்களை மாற்றி அதை விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்வதற்காக சப்-இன்ஸ்பெக்டர் மாரி மற்றும் போலீசார் திருவண்ணாமலைக்கு சென்றனர்.

ஆனால் அங்கு பாஸ்கர் இல்லை. அவரது தந்தை ராஜேந்திரன் மட்டுமே இருந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து ஒகேனக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள பாஸ்கரை தொடர்ந்து தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்