களக்காட்டில் பரிதாபம் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

களக்காட்டில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-06-05 20:30 GMT

களக்காடு,

களக்காட்டில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

ஜவுளிக்கடை ஊழியர்

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவருடைய மகன் பொன்ராஜ் (வயது 24). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது, அவருக்கும் அதே கடையில் வேலை பார்த்து வந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென்று அந்த பெண் தன்னுடைய காதலை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொன்ராஜ் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதையடுத்து அவர் தனது சொந்த ஊரான கோபாலசமுத்திரத்திற்கு வந்து விட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்ராஜ் தனது உறவினரான களக்காடு தெற்கு தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (53) என்பவரின் வீட்டில் தங்கி இருந்தார்.

நேற்று மதியம் வேல்முருகன் தனது குடும்பத்துடன் வள்ளியூருக்கு சென்று விட்டார். இதனால் பொன்ராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். காதல் தோல்வியால் மனமுடைந்து காணப்பட்ட பொன்ராஜ் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த வேல்முருகன், பொன்ராஜ் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக களக்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொன்ராஜ் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்