பாவூர்சத்திரத்தில் அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூல் திரும்ப ஒப்படைக்க அதிகாரிகள் உத்தரவு
பாவூர்சத்திரம் அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை உடனே திரும்ப ஒப்படைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.;
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தை உடனே திரும்ப ஒப்படைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பணம் வசூல்நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் பாவூர்சத்திரம், கீழப்பாவூர், குறும்பலாபேரி, கல்லூரணி, திப்பணம்பட்டி, மகிழ்வண்ணநாதபுரம், சாலைப்புதூர், கருமடையூர், மூலக்கரையூர், செல்வவிநாயகபுரம், சிவநாடானூர், ராமச்சந்திரபட்டணம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1,500–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கூடத்தில் பிளஸ்–1 மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அப்போது மாணவர்களிடம் இருந்து ரூ.1,000 முதல் ரூ.3,500 வரை பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின், பெற்றோர் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார்.
கல்வி அதிகாரி ஆய்வுஅதன்படி நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா நேரடி மேற்பார்வையின் பேரில் அதிகாரிகள் நேற்று பள்ளிக்கூடத்தில் ஆய்வு நடத்தினர். தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் ஷாஜகான் மற்றும் கல்வி அதிகாரிகள் பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு நடத்தினர்.
மேலும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடமும், பிளஸ்–1 மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் மாணவர்களிடம் இருந்து பணம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. அப்போது பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக நன்கொடையாக வசூலிக்கப்பட்ட பணத்தை பயன்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
திரும்ப ஒப்படைக்க உத்தரவுஇதையடுத்து மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை உடனடியாக திரும்ப ஒப்படைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் இனி மாணவர் சேர்க்கையின் போது மாணவர்களிடம் கட்டாய நன்கொடை மற்றும் இதர கூடுதல் மறைமுக கட்டணங்கள் வசூலிக்க கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இது தொடர்பாக தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஷாஜகான் அளித்த அறிக்கை சென்னை கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கல்வித்துறை உத்தரவுப்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பாவூர்சத்திரத்தில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பணம் வசூலிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.