தூத்துக்குடியில் போலீசாரால் தாக்கப்பட்டதில் இறந்தாரா? பாளை. சிறைக்கைதியின் உடலை பாதுகாப்பாக வைக்க வேண்டும்

தூத்துக்குடியில் போலீசாரால் தாக்கப்பட்டதில் இறந்தாரா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு இருப்பதால், பாளை சிறையில் மரணம் அடைந்த கைதியின் உடலை பாதுகாப்பாக வைத்திருக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-06-05 22:15 GMT

மதுரை,

தூத்துக்குடியை சேர்ந்த செல்வசவுந்தர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

பாளையங்கோட்டை சிறையில் ஆயுள்தண்டனை கைதியாக இருந்த எனது சகோதரர் பரத் என்ற பரத்ராஜா, மற்றொரு சகோதரரான தனசேகரனின் திருமணத்தில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் 17–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை பரோலில் வந்தார். இந்தநிலையில் கடந்த 22–ந்தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து பலரை போலீசார் கைது செய்தனர். என்னையும், பரத்ராஜாவையும் தூத்துக்குடி தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கினார்கள். பரோலில் வந்துள்ளதாக பரத்ராஜா கூறியதை போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர் எங்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி சிறையில் அடைத்தனர். பரத்ராஜாவின் பரோல் முடிந்ததால் அவரை பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றினர்.

இதற்கிடையே கடந்த 30–ந்தேதி பரத்ராஜா சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர். அங்கு சென்று அவரை பார்க்க முயன்றபோது இறந்துவிட்டதாக கூறி பிரேத பரிசோதனையை முடித்துள்ளனர். அவரது மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. எனவே பரத்ராஜாவின் உடலை தடய அறிவியல் துறை பேராசிரியர்கள் தலைமையில் மறுபிரேத பரிசோதனை செய்து அதன் அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

முடிவில், பரத்ராஜாவின் உடலை தற்போதையநிலையிலேயே பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்