மதுப்பழக்கத்தை கணவர் கைவிடாததால் மகள்–மகனுடன் தற்கொலைக்கு முயன்ற பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சின்னாளபட்டி அருகே, மதுப்பழக்கத்தை கணவர் கைவிடாததால் தனது மகள்–மகனுடன் தூக்க மாத்திரைகளை தின்று பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2018-06-05 22:30 GMT

சின்னாளபட்டி,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள என்.பஞ்சம்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. அவருடைய மனைவி டெய்சிமேரி (வயது 27). இவர்களுக்கு மரிய ரூபி (8) என்ற மகளும், மரிய வில்சன் (6) என்ற மகனும் உள்ளனர். வேளாங்கண்ணியும், டெய்சி மேரியும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். வேளாங்கண்ணிக்கு மது பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட டெய்சிமேரி இனி மது குடித்துவிட்டு வந்தால், குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வேன் என்று வேளாங்கண்ணியை மிரட்டியுள்ளார். ஆனாலும் வேளாங்கண்ணி குடிப்பழக்கத்தை கைவிடவில்லை. இதனால் டெய்சி மேரி தனது மகள், மகனுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி தனது மகள், மகனுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்தார். மேலும் அவரும் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

சிறிது நேரத்தில் தாயும், குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அவர்கள் 3 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்