நகை பறிப்பு கும்பலை பிடித்தபோது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு

பழனி அருகே நகை பறிப்பு கும்பலை பிடித்தபோது போலீஸ் சப்–இன்ஸ்பெக்டருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2018-06-05 21:45 GMT

பழனி,

கோவையை அடுத்த மதுக்கரை கே.ஜி.சாவடி பகுதியை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவர், கடந்த 30–ந்தேதி அதே பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர், பச்சையம்மாள் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் நகை பறித்த திருடர்களை பிடிக்க மதுக்கரை இன்ஸ்பெக்டர் தங்கபாண்டி தலைமையில், பேரூர் சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ஆசிக் அகமது, விக்னேஷ் ஆகியோர் பச்சையம்மாளிடம் நகை பறித்தது தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் கொடைக்கானலில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் கொடைக்கானல் வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆசிக் அகமது, விக்னேஷ் ஆகியோர் கொடைக்கானலில் இருந்து ஒரு காரில் நேற்று இரவு பழனி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு காரில் தனிப்படை போலீசார் விரட்டி வந்தனர். மேலும் இது தொடர்பாக தனிப்படை போலீசார், பழனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

பழனி–கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள அய்யம்புள்ளி சோதனைச்சாவடியில் போலீசார் மறித்தனர். ஆனால் காரை நிறுத்தாமல் சோதனைச்சாவடியை உடைத்து விட்டு கார் சென்று விட்டது. இதைத்தொடர்ந்து பழனி அடிவாரம் கிரிவீதி ரோப்கார் நிலையம் அருகே உள்ள சோதனைச்சாவடியில் 2 போலீசார் அந்த காரை வழிமறித்தனர்.

அப்போது காரில் இருந்து இறங்கிய 2 பேரும் போலீசாரை சரமாரியாக தாக்கினர். இதில், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு ஏட்டு சிவகணேஷ் காயம் அடைந்தார். இதற்கிடையே கொடைக்கானலில் இருந்து பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த தனிப்படையினர் கீழே இறங்கி அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் ஆத்திரம் அடைந்த ஆசிக் அகமது, விக்னேஷ் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினாரை சரமாரியாக வெட்டினர்.

ஒரு கட்டத்தில் போலீசாரும், அவர்களும் கட்டி புரண்டு சண்டை போட்டனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள், கோவைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினாருக்கு கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்