கோவை அருகே அறிவொளி நகரில் சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து கேமரா பொருத்தி கண்காணிப்பு வனத்துறையினர் தீவிர நடவடிக்கை
கோவை அருகே உள்ள அறிவொளி நகரில் சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து கண்காணிப்பு கேமரா பொருத்தி, வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டு யானைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவார பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அவற்றை தடுத்து நிறுத்த வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் அவற்றை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடிய வில்லை.
இந்த நிலையில் கோவை அருகே உள்ள மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட அறிவொளி நகரில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதாகவும், அதைப்பிடித்து வனப்பகுதியில் விடக்கோரி அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட வன அதிகாரி வெங்கடேசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணிக்க மதுக்கரை வனச்சரக அதிகாரி செந்தில்குமார் தலைமையில் 7 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் அந்தப்பகுதியை சேர்ந்தவர்களிடம் எந்தப்பகுதியில் சிறுத்தைப்புலி வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.
அத்துடன் அவர்கள் கூறிய இடத்தில் சிறுத்தைப்புலி வந்து சென்றதற்கான கால்தடம் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். ஆனால் சிறுத்தைப்புலி வந்து சென்றதற்கான அடையாளம் எதுவும் வனத்துறையினருக்கு தெளிவாக கிடைக்கவில்லை. எனவே அந்தப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–
அறிவொளி நகரில் சிறுத்தைப்புலியை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. வனப்பகுதியை விட்டு வெளியே வந்த சிறுத்தைப்புலியை பொதுமக்கள் பார்த்ததும் கூச்சலிட்டனர். அந்த சத்தத்தை கேட்டு, சிறுத்தைப்புலி மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடி விட்டது. இதுவரை அந்தப்பகுதியில் உள்ள கால்நடைகளை கடித்ததாகவும் புகார் இல்லை.
எனவே மீண்டும் அந்த சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்து விடுவதை தடுக்க, இரவு நேரத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். அத்துடன் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவையும் கண்காணித்து வருகிறோம். ஆனால் இதுவரை அந்த சிறுத்தைப்புலி மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியே வரவில்லை. இருந்தபோதிலும் இரவு நேரத்தில் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.