கோவை மத்திய சிறையில் பயங்கரம்: தலையில் கல்லை போட்டு கைதி படுகொலை
கோவை மத்திய சிறையில் தலையில் கல்லை போட்டு கைதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மற்றொரு கைதியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). இவர் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்து கோவை மத்திய சிறையில் கடந்த மாதம் 5–ந் தேதி அடைத்தனர்.
கோவையை அடுத்த பேரூர் பரட்டையம்மாள் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜய் (19). இவர், அதே பகுதியை சேர்ந்த ஒருவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக பேரூர் போலீசார் கைது செய்தனர். இவர் கடந்த மாதம் 25–ந் தேதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணை கைதிகளான அவர்கள் இருவரும் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
இதற்காக அவர்கள் சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தனர். அதற்காக தினமும் மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தனர். இதன் காரணமாக அவர்கள் இருவரும் சிறை வளாகத்தில் விசாரணை கைதிகள் தங்கும் இடத்தில் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் உணவு நேரத்தில் அனைத்து கைதிகளும் சாப்பிடுவதற்காக தங்கள் அறைகளில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர். அங்கு கைதிகள் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். சிலர் சாப்பிட்டு விட்டு ரமேஷ் உள்ளிட்ட கைதிகள் அங்கேயே அமர்ந்து இருந்தனர்.
அப்போது மதியம் 1.40 மணிக்கு சாப்பிட்டு முடித்த விஜய், கழிவறை சென்றுவிட்டு வெளியே வந்தார். இதை பார்த்த ரமேஷ், திடீரென்று விஜய்யின் தாயார் குறித்து தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த விஜய், அங்கு கிடந்த கல்லை எடுத்து ரமேஷ் தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மற்ற கைதிகள் மற்றும் சிறைத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ரமேசை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சிறை வளாகத்துக்குள் சென்று, சக கைதிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சிறைத்துறை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:–
ரமேசை கொலை செய்த விஜய்க்கு 19 வயது என்றாலும், அவர் கோர்ட்டு உத்தரவு காரணமாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களுக்குள் முன்விரோதம் இல்லை. அவர்கள் இருவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் டாக்டர்கள் வாரத்துக்கு 3 நாட்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
விஜய், கழிவறை சென்று விட்டு திரும்பியபோது, ரமேஷ் திடீரென்று அவரை திட்டியதால்தான் இந்த சம்பவம் நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் வேறு ஏதாவது காரணங் களுக்காக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து விஜய் மற்றும் கைதிகள், சிறைத்துறை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கோவை மத்திய சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் கைதியின் தலையில் கல்லை போட்டு மற்றொரு கைதி கொலை வெறிச்செயல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.