உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அமராவதி ஆற்றில் தூய்மை பணி

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கரூர் அமராவதி ஆற்றில் தூய்மை பணியை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார். அப்போது குப்பைகளை சேரவிடாமல் தடுப்பது பற்றி பள்ளி மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.;

Update: 2018-06-05 22:45 GMT
கரூர்,

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பசுபதி பாளையம் அமராவதி ஆற்றில் நேற்று தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் கரூர் மாவட்ட வனத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சுற்றுச்சூழல் மன்றங்கள், கரூர் ரோட்டரி டெக்சிட்டி மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் தங்களது பங்களிப்பினை அளித்தனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, அமராவதி ஆற்றினை சுத்தப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது நான் பழைய பொருட்களை மீண்டும் பயன்படுத்துவேன், கடைகளுக்கு துணிப்பையை கொண்டுசெல்வேன், மரங்களை அதிகம் நடுவேன் மற்றும் குப்பைகளை சேர விடாமல் தடுத்து பசுமை சூழலை உருவாக்குவது பற்றிய உறுதிமொழியினை கலெக்டர் வாசித்தார்.

அதனை பின்தொடர்ந்தபடியே பள்ளி மாணவ-மாணவிகள் அதனை திரும்ப கூறி உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும் சுற்றுப்புற சூழலை பாதிப்பதில் பிளாஸ்டிக் உபயோகம் தான் பிரதானமாக இருக்கிறது.

எனவே அதனை தவிர்க்க வேண்டும் என நிகழ்ச்சியின் போது மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் கலெக்டர் உள்பட அதிகாரிகளுக்கு துணிப்பை பரிசாக வழங்கப்பட்டது.

லாரிகள் மூலம் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன

அதனை தொடர்ந்து துடைப்பத்தை கையில் எடுத்த கலெக்டர் அன்பழகன் அமராவதி ஆற்றில் சிதறி கிடந்த குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தினார். அவருடன் சேர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப்பணித்திட்டம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் உள்ளிட்டோர் இதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு ஆற்றினை சுத்தப்படுத்தினர். இங்கிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள் அனைத்தும் நகராட்சி குப்பை லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.

முன்னதாக நிகழ்ச்சியில் அமராவதி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறியதாவது:-

இந்த ஆண்டில் பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம் என்பதை கருப்பொருளாக கொண்டு தூய்மை பணிகள் இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீர் ஆதார மையங்களான குளங்கள், ஏரிகள், வாய்க்கால் ஆகிய இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை முதல்கட்டமாக அப்புறப்படுத்திடவும், இப்பகுதிகளிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும் அப்புறப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணி தொடர்ந்து நடைபெறும். சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படும்.

மேலும் குளங்கள், ஏரிகள், அணைகள் போன்ற இடங்களிலும், நீர் வழித்தடங்களான ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் போன்ற இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு கரைகளை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட்டு கரூர் மாவட்டத்தை சுற்றுச்சூழல் வளம் மிக்க மாவட்டமாக மாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட வன அதிகாரி அன்பு, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, கரூர் ரோட்டரி டெக்சிட்டி தலைவர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்