உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் நடிகர் விவேக் பேச்சு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நீலகிரியில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும் என்று நடிகர் விவேக் கூறினார்.

Update: 2018-06-05 22:45 GMT

ஊட்டி,

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5–ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் தினத்தன்று பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா ஊட்டியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித ஸ்டீபன் ஆலய வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா முன்னிலை வகித்தார். விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். அதன் பின்னர் அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நடிகர் விவேக் கூறியதாவது:–

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நாடு முழுவதும் மரக்கன்றுகளை நட்டு பசுமையை காக்க வேண்டும் என்று அறிவித்து இருந்தார். அவர் வழியில் தமிழகம் முழுவதும் 30 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தற்போது நீலகிரி மாவட்டத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. ஆலய வளாகங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள், தொழிற்சாலை வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டால், மரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படும். நீலகிரி கலெக்டர் எடுத்த முயற்சியால் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை செய்யப்பட்டு சுகாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது இளைஞர்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால், இளைஞர்களே ஆறு, குளங்களை தூர்வாருதல், குப்பைகளை அகற்றுதல், சுகாதார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகவும் வரவேற்கத்தக்கது. மாணவர்களாகிய நீங்கள் ஊட்டியில் லூட்டி அடித்து, அதன் பியூட்டியை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மரக்கன்றுகளை நடுவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன், உதவி வனப்பாதுகாவலர் சரவணன், ஊட்டி நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) ரவி, புனித ஸ்டீபன் ஆலய குருக்கள் ரமேஷ்பாபு, ஜெரோம் மற்றும் சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளி மாணவ–மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை பணி ஊட்டி காந்தல் கஸ்தூரிபாய் பகுதியில் நடந்தது. நடிகர் விவேக் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோத்தகிரி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோத்தகிரி சப்–இன்ஸ்பெக்டர்கள் நசீர், கவுதம் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர். இதில் தலைமை காவலர்கள் ராஜேந்திரன், சர்மிளா, ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்