தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: விசாரணைக்கு ஆஜராகுமாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்மன் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அனுப்புகிறது

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்புகிறது.

Update: 2018-06-05 20:30 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்புகிறது.

துப்பாக்கி சூடு

தூத்துக்குடியில் கடந்த 22–ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்கள் சேகரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் துப்பாக்கி சூட்டின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் கோர்ட்டு அனுமதியுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த துப்பாக்கிகளையும் கோர்ட்டு மூலம் தடயவியல் துறைக்கு ஆய்வுக்காக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சம்மன்

தற்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் விரைவில் தூத்துக்குடிக்கு வந்து விசாரணை நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள்