காரைக்குடி–பட்டுக்கோட்டை இடையே பாசஞ்சர் ரெயில் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

காரைக்குடி–பட்டுக்கோட்டை இடையே புதிதாக அமைக்கப்பட்ட அகல ரெயில் பாதையில் பாசஞ்சர் ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2018-06-05 23:00 GMT

காரைக்குடி,

காரைக்குடி–பட்டுக்கோட்டை இடையே 73 கிலோ மீட்டர் தூரத்தில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு முழு பணியும் நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் மனோகரன் தலைமையில், திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் உதயகுமார் ரெட்டி, தலைமை நிர்வாக அதிகாரி சுதாகர்ராவ் ஆகியோர் காரைக்குடி–பட்டுக்கோட்டை ரெயில் பாதையில் சோதனை ரெயில் ஓட்டத்தை நடத்தினர். அது வெற்றியடைந்ததை தொடர்ந்து மார்ச் 30–ந்தேதி இத்தடத்தில் பாசஞ்சர் ரெயில் சேவை தொடங்கியது.

காரைக்குடியில் புறப்படும் ரெயில் கண்டனூர்–புதுவயல், பெரியகோட்டை, வளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயக்குடி, பேராவூரணி, ஒட்டங்காடு வழியாக பட்டுக்கோட்டையை சென்றடைந்தது. இந்த ரெயிலில் பயணிகள் கட்டணம் ரூ.20ஆக நிர்ணயிக்கப்பட்டது. தினசரி ரெயிலாக இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இந்த ரெயில், மறுநாள் முதல் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்த ரெயில் வழித்தடத்தில் தற்போது எந்த ரெயிலும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீண்டும் இந்த வழித்தடத்தில் ரெயில் இயக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த ரெயில் வழித்தடத்தில் கண்டனூர்–புதுவயல் பகுதியில் ஏற்கனவே மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது ரெயில் நிலையத்தை முற்றிலுமாக மாற்றி, தற்போது புதிய ரெயில் நிலையமாக அமைக்கப்பட்டது. இந்த ரெயில் நிலையத்தில் பணி நிலைய அதிகாரி அறை, டிக்கெட் வழங்கும் அறை, குடிநீர் வசதி, கழிப்பறை, பயணிகள் இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் ரெயில் பாதையில் தற்போது ரெயில்கள் இயக்கப்படாததால், கண்டனூர் ரெயில் நிலையம் இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாக திகழ்ந்து வருகிறது. இதுதவிர இந்த ரெயில் நிலையம் அருகே டாஸ்மாக் கடை ஒன்றும் செயல்பட்டு வருகிறது. குடிமகன்கள் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் அமர்ந்து குடித்துவிட்டு, அங்கேயே காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளை போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் அங்கு சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பகுதியில் ஏராளமான அரிசி ஆலைகள் மற்றும் பிற தொழில்கள் நடைபெற்று வருகிறது. இதனால் இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியூர்களில் இருந்து, இங்கு வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். எனவே தொழில் நகராக உள்ள இந்த பகுதியில் மீண்டும் இந்த ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர இந்த ரெயிலை சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று காரைக்குடி, தேவகோட்டை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே ரெயில் பாதையில் நிறுத்தப்பட்ட பாசஞ்சர் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்