ராமேசுவரம் கோவிலில் உள்ள பழமை வாய்ந்த தேரில் புதிதாக சிம்மாசனம் அமைக்கும் பணிகள் நிறைவு

ராமேசுவரம் கோவிலில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாமி தேரில் 4½ லட்சம் நிதியில் புதிதாக சிம்மாசனம் அமைக்கும் பணிகள் நிறைவுபெற்றன.

Update: 2018-06-05 22:30 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த 2 தேர்கள் உள்ளன. ஆண்டு தோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் போது சாமி–அம்பாள் இந்த தேர்களில் தனித்தனியாக எழுந்தருளி வலம் வருவது வழக்கம். அதுபோல் சாமி தேர் 16 அடி உயரமும், அம்பாள் தேர் 12 அடி உயரமும் உள்ளக.

இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சாமி தேரின் சிம்மாசனத்தை மாற்றி மராமத்து பணிகள் செய்ய இந்து சமய அறநிலையத்துறை ரூ.4½ லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. அதைதொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ராமேசுவரம் கோவிலில் உள்ள பழமையான சாமி தேரை மராமத்து செய்து சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த 4 மாதமாக நடைபெற்று வந்த சீரமைப்பு பணியில் தேரின் சேதமான சிம்மாசனம் அகற்றப்பட்டு, புதிதாக சிம்மாசனம் அமைக்கும் பணி நேற்றுடன் முழுமையாக முடிவடைந்து விட்டது.

இந்த புதிய சிம்மாசனத்தை நேற்று கோவிலின் இணைஆணையர் மங்கையர்க்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது இணை ஆணையர் மங்கையர்க்கரசி கூறியதாவது:– ராமேசுவரம் கோவிலில் உள்ள சாமி, அம்பாள் வலம் வரும் 2 தேர்களும் மிகவும் பழமை வாய்ந்தது.

இவற்றில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் இரும்பு சக்கரங்கள் புதிதாக பொருத்தப்பட்டன. அதுபோல அம்பாள் தேரில் ஏற்கனவே 3½ லட்சம் நிதியில் புதிதாக சிம்மாசனம் அமைக்கப்பட்டுவிட்டது. தற்போது சாமி தேரில் ரூ.4½ லட்சம் நிதியில் புதிதாக சிம்மாசனம் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்