மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பரிதாப சாவு
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தேனி,
தேனி மாவட்டம், பெரியகுளம் தண்டுபாளையம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த முகமது இப்ராகிம் மகன் முகமது இஸ்மாயில் (வயது 19). நேற்று முன்தினம் இரவு இவர் பெரியகுளத்தில் இருந்து தேனி நோக்கி வந்து கொண்டு இருந்தார். தேனி புறவழிச்சாலையில் வந்த போது, இவருக்கு முன்னால் பெரியகுளம் வடகரையை சேர்ந்த முகமது அசாருதீன் என்பவர் ஒரு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று கொண்டு இருந்தார். அதில், வடகரை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரபீக் மகன் சல்மான்கான் (22) அதே பகுதியை சேர்ந்த சதாம்உசேன் ஆகியோர் அமர்ந்து பயணம் செய்தனர். புறவழிச்சாலையில் வனத்துறை நாற்றுப்பண்ணை அருகில் வந்த போது, எதிரே தாமரைக்குளத்தை சேர்ந்த சங்கரமூர்த்தி மகன் முருகபாண்டி (33) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், முகமது அசாருதீன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், சல்மான்கான், சதாம்உசேன், முகமது அசாருதீன் மற்றும் முருகபாண்டி ஆகிய 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அனைவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், சல்மான்கான் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இந்த விபத்து குறித்து முகமது இஸ்மாயில் கொடுத்த புகாரின் பேரில் முருகபாண்டி மீது தேனி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அசோக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் பலியான சல்மான்கான், பெரியகுளத்தில் ஒரு செருப்பு கடையில் வேலை பார்த்து வந்தார். அவரும், அவருடைய நண்பர்களும் தேனிக்கு புதிய ஆடைகள் வாங்க வந்த போது விபத்தில் சிக்கி உள்ளனர்.