மது போதையில் போரூர் ஏரியில் குளித்தவர் நீரில் மூழ்கி சாவு

போரூர் ஏரியில் மதுபோதையில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிர் இழந்தார்.;

Update: 2018-06-05 22:45 GMT
பூந்தமல்லி,

சென்னை ஜாபர்கான்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது அலி (வயது 55). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் முகமது அலியும், அவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்த சங்கர் (45), என்பவரும் நேற்று முன்தினம் மாலை போரூர் ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தினர். பின்னர் அவர்கள் இருவரும், ஏரியில் இறங்கி குளித்தனர். அப்போது முகமது அலி ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார்.

போதையில் இருந்ததால் அவரால் தப்பி வர முடியவில்லை. இதைப் பார்த்த சங்கர், முகமது அலியை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அவர் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

இதையடுத்து, போதையில் இருந்த சங்கர், பயத்தில் என்ன செய்வதென்று அறியாமல் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை அவர் போரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார், விருகம்பாக்கம் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த முகமது அலியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

இதையடுத்து அவருடைய உடல் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்