3 நிமிடத்தில் சமைக்கும் ‘ரோபோகிச்சன்’

சமையல் மாஸ்டர்களான ‘ஷெப்’களை ஓரங்கட்டிவிட்டு, அசத்தும் சுவையுடன் சமைக்கும் வகையில் ரோபோ சமையலறையை உருவாக்கியிருக்கிறது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழு.

Update: 2018-06-05 06:31 GMT
பொதுவாகவே காய்கறி நறுக்க, சமைக்க நிறைய நேரம் பிடிக்கும். அதுவும் ரெஸ்டாரண்டுகளில் குவியும் உணவுப் பிரியர்களை சமாளிக்க அதிக எண்ணிக்கையில் ஆட்களை நியமிக்க வேண்டியிருக்கும்.

இதைப்பற்றி யோசித்த அமெரிக்க எம்.ஐ.டி. மெக்கானிக்கல் என்ஜினீயர்கள் குழு, முழுக்க முழுக்க எந்திரங்களைக் கொண்ட ரோபோ சமையல் அறையை உருவாக்கும் திட்டத்தில் இறங்கியது.

2015-ம் ஆண்டு தொடங்கிய இந்த திட்டத்தால் (குளோவர் பவுண்டர்ஸ் ஸ்கில்ஸ் ஆக்சலரேட்டர் புரோகிராம்) இப்போது ரோபோகிச்சன் முழுமையடைந்துள்ளது. பாஸ்டன் நகரில் உள்ள ‘ஸ்பைஸ்’ உணவு விடுதியில் செயல்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்களை சேர்ப்பது, வறுப்பது, அவிப்பது என அனைத்து வேலைகளையும் 3 நிமிடத்தில் முடித்து கொடுத்துவிடுகிறது. இந்த சமையல் எந்திரங்கள். ஆசிய உணவுகள், லத்தின் மற்றும் மத்திய தரைகடல் உணவு வகைகள் பலவற்றை இவை பக்குவமாக செய்கின்றன. இதை வாடிக்கையாளர்கள் நேரடியாக பார்க்கலாம்.

“தேவையான பொருட்களை எடுத்துக் கொடுப்பது மற்றும் இறுதியில் பரிமாறுதல் வேலையில் மட்டுமே எங்கள் பணியாட்கள் ஈடுபடுகிறார்கள். எந்திரங்கள் துரிதமாக உணவு சமைத்துக் கொடுப்பது விருந்தினர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதனால் விலையையும் வெகுவாக குறைத்துள்ளோம்” என்கிறார்கள் உணவு விடுதி நிர்வாகிகள். 

மேலும் செய்திகள்