விவசாயிகள் போராட்டத்துக்கு சரத்பவார் ஆதரவு: பா.ஜனதா மீது குற்றச்சாட்டு
விவசாயிகள் போராட்டத்துக்கு சரத்பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை பா.ஜனதா நிறைவேற்ற தவறியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மும்பை,
பயிர்க்கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி முதல் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக பால், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை தரையில் கொட்டி விவசாயிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் நகரங்களுக்கு செல்லும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் நிறுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் விவசாயிகள் போராட்டதுக்கு தனது ஆதரவை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
ஒரு விவசாயியாக தற்போதைய போராட்டத்துக்கு நான் எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன். பா.ஜனதா தனது தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் விவசாயிகள் தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிகப்படியான கடன் தொல்லை காரணமாக விவசாயிகளால் விவசாயத்தை தொடர முடியவில்லை. இதனை புரிந்து கொண்டு சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் விவசாயிகளின் போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும்.
விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தரையில் கொட்டுவதற்கு பதிலாக ஏழைகளுக்கு வழங்கலாம். அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவது போல தெரியவில்லை. இது குறித்து விவசாயிகள் தீவிரமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் பா.ஜனதாவை சேர்ந்த மாநில வேளாண்துறை மற்றும் விலைவாசி குழு தலைவர் பாஷா பட்டேல், சரத்பவாரின் குற்றசாட்டுகளை நிராகரித்தார். மேலும் சரத்பவார் 10 ஆண்டுகள் மத்திய வேளாண்துறை மந்திரியாக பதவி வகித்த காலத்தில் அவர் ஏன் விவசாயிகளின் பிரச்சினைகளை சரி செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். விவசாயிகளின் தற்போதைய நிலைமைக்கு கடந்த ஆட்சியின் மோசமான நிர்வாகமே காரணம் என அவர் தெரிவித்தார்.