மெட்ரோ ரெயில் பணி நடைபெறும் 3 இடங்களில் ஒலி மாசு அளவு பதிவு: ஐகோர்ட்டில் அரசு தகவல்
மெட்ரோ ரெயில் பணி நடைபெறும் 3 இடங்களில் ஒலி மாசு அளவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்துள்ளது.
மும்பை,
மும்பை மெட்ரோ ரெயில் திட்டம் மூன்றாம் கட்ட பணிகளின்போது ஒலி மாசுபாடு அதிகளவில் ஏற்படுவதாக கூறி மும்பை ஐகோர்ட்டில் பல்வேறு அமைப்பினர் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் பகுதிகளில் ஏற்படும் ஒலி மாசுபாடு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.ஒகா மற்றும் ரியாஸ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் நிஷா மெஹ்ரா, மும்பையில் சர்ச்கேட், கப்பரடே, மாகிம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகளின்போது ஏற்படும் ஒலி மாசுபாடு அளவு அதிகாரிகள் தரப்பில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இது குறித்து இன்னமும் ஒரு வார காலத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.