அமராவதி கலெக்டர் அலுவலகம் முன்பு 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
அமராவதி கலெக்டர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;
மும்பை,
மராட்டியத்தில் விவசாயிகள் விளைவித்த பருப்புகளை விவசாய விளைபொருள் சந்தை கமிட்டியினர் கொள்முதல் செய்யுமாறு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சமீபத்தில் அமராவதியில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் விவசாய விளைபொருள் சந்தை கமிட்டி அதிகாரிகள் கடந்த 3 மாதங்களாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை முறையாக வழங்கவில்லை என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இந்தநிலையில் அமராவதி மாவட்டம் தமங்காவ் ரெயில்வே தொகுதி எம்.எல்.ஏ. விரேந்திர ஜக்தாப் மற்றும் தியோசா தொகுதி எம்.எல்.ஏ. யஷ்மோமதி தாக்கூர் ஆகியோர் விளைபொருள் சந்தை கமிட்டியினர் தங்கள் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிடில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் நேற்று அமராவதி கலெக்டர் அலுவலகம் முன்பாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைக்க முயற்சித்தனர். அப்போது அங்கு தயார் நிலையில் இருந்த போலீசார் எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து எம்.எல்.ஏ. விரேந்திர ஜக்தாப் கூறியதாவது:-
மாநிலத்தில் பருவ மழை தொடங்க இருக்கும் நிலையில், ஆன்-லைனில் பதிவு செய்துள்ள வெறும் 25 முதல் 30 சதவீத விவசாயிகளிடம் அரசு பருப்புகளை கொள்முதல் செய்து இருக்கிறது. மேலும் மாவட்டத்தில் 67 சதவீதத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்னமும் அரசின் பயிர்க்கடன் தள்ளுபடியால் பயனடையவில்லை. விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரசின் நல்ல நேரத்தாலேயே மந்திரிகள் மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை விவசாயிகள் சுதந்திரமாக நடமாடவிட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.