அரசு பள்ளியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தை சட்டப்படி தான் வெளியேற்ற வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

அரசு பள்ளியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தை சட்டப்படி தான் வெளியேற்ற வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-06-04 23:15 GMT
மும்பை,

தெற்கு மும்பை பகுதியை சேர்ந்த மாநகராட்சி பள்ளியில் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சேவை தொடர்பான தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மும்பை மாநகராட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி பள்ளியின் 5 அறைகளை கடந்த 2003-ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மாநகராட்சி கல்வித்துறை பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு தொண்டு நிறுவனத்தினருக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொண்டு நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ்.ஒகா மற்றும் ரியாஸ் சாக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனம் பள்ளியில் உள்ள 5 அறைகளையும் புற்றுநோயாளிகளின் நன்மைக்காக லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையில் தான் பயன்படுத்தி வருவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து தொண்டு நிறுவனத்தை வெளியேற்ற வேண்டுமானால் மும்பை மாநகராட்சி சட்டத்தை பயன்படுத்தி முறையாக நடவடிக்கை எடுக்கும்படியும், வெறும் கடிதம் மூலம் அவர்களை வெளியேறும்படி உத்தரவிட முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்