கர்நாடக மேல்-சபை தேர்தலில் மனு தாக்கல் செய்த 11 பேரும் போட்டியின்றி தேர்வு என அறிவிப்பு
கர்நாடக மேல்-சபை தேர்தலில் மனு தாக்கல் செய்த 11 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மேல்-சபையில் 11 இடங்கள் காலியாகின்றன. இதையடுத்து அந்த 11 இடங்களுக்கு வருகிற 11-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். மனு தாக்கல் செய்ய கடந்த மே மாதம் 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
கடைசி நாளில் பா.ஜனதா சார்பில் ரவிக்குமார், தேஜஸ்வினிகவுடா, கே.பி.நஞ்சுண்டி, ருத்ரேகவுடா, ரகுநாத் மல்காபுரே ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் அரவிந்த்குமார் அரளி, கோவிந்தராஜூ, ஹரீஷ்குமார், சி.எம்.இப்ராகிம் ஆகியோரும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் பி.எம்.பாரூக், தர்மேகவுடா ஆகிய 11 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த தேர்தலில் மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். ஆனால் யாரும் மனுக்களை வாபஸ் பெறவில்லை. இதையடுத்து கர்நாடக சட்டசபை இணை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான குமாரசாமி நேற்று மனுக்களை தாக்கல் செய்த 11 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். மேலும் அந்த 11 வேட்பாளர்களையும் வரவழைத்து எம்.எல்.சி.யாக தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினார்.
கர்நாடக சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில் பா.ஜனதா சார்பில் 5 பேரையும், காங்கிரஸ் சார்பில் 4 பேரையும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் 2 பேரையும் தேர்ந்தெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படியே அக்கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த முறை கர்நாடக மேல்-சபையில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி கட்சிகள் அமைத்து, மேலவை தலைவர் பதவியை பா.ஜனதாவுக்கும், துணைத்தலைவர் பதவியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும் பங்கிட்டு கொண்டது. இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அதனால் மேல்-சபையில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைய உள்ளது. இதனால் பா.ஜனதா வசம் உள்ள மேலவை தலைவர் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.