தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ் படையை திரும்ப பெற வேண்டும் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ் படையை திரும்ப பெற வேண்டும் என ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-06-04 23:15 GMT
கும்பகோணம்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கும்பகோணத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றதை தொடர்ந்து அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப போலீஸ் படையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி உள்ளது. இந்த நட வடிக்கை போதாது.

கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதியின் நேரடி கண்காணிப்பில் மத்திய குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. மூலமாகவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டுமே தவிர கைது செய்ய கூடாது.

மாநில அரசின் தவறான கொள்கை காரணமாக உயர்கல்வி துறையில் 95 சதவீதம் தனியாரிடம் சென்றுவிட்டது. மத்திய திட்டக்குழுவின் அறிக்கையின்படி தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தமிழக அரசு மூடி மறைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்திருக்கிறது. பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவி விட்டது.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பிரசார பயணம் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 14-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி கலந்து கொண்டு பேசுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், சின்னைபாண்டியன், ஜெயபால் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்