பெருஞ்சாணி அணை திறக்கப்பட்டது 79 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்

குமரி மாவட்ட பாசனத்துக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 850 கனஅடி நீரை கலெக்டர் பிரசாந்த் வடநேரே-விஜயகுமார் எம்.பி. ஆகியோர் திறந்து விட்டனர். இதன்மூலம் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Update: 2018-06-04 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரு போக சாகுபடி நடைபெறுகிறது. இந்த மாவட்ட பாசனத்துக்கு ஜீவநாடியாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, மாம்பழத்துறையாறு, பொய்கை போன்ற அணைகள் திகழ்கின்றன. இந்த அணைகள் ஆண்டுதோறும் ஜூன் மாத முதல் வாரத்தில் திறக்கப்பட்டு, பிப்ரவரி மாத இறுதியில் மூடப்படுவது வழக்கம். அதேபோல் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பேச்சிப்பாறை அணையை தவிர பிற அணைகள் மூடப்பட்டன.

இதற்கிடையே பேச்சிப்பாறை அணையில் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி முதல் ரூ.61.30 கோடி செலவில் மேம்பாட்டுப்பணிகளும், அணையை பலப்படுத்தும் பணியும் தொடங்கி, நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக பேச்சிப்பாறை அணையில் உள்ள நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து இருந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, பொய்கை, மாம்பழத்துறையாறு போன்ற அணைகள் மூடப்பட்டு இருந்தன. பாசனத்துக்கு தேவையில்லாத நேரத்திலும் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் குளங்களில் சேமிக்கப்பட்டு வந்தது.

வழக்கமாக மே மாத மத்தியில் அல்லது இறுதியில் கன்னிப்பூ சாகுபடி வேலையை விவசாயிகள் தொடங்கி விடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் இல்லாமல், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், இந்த ஆண்டு கன்னிப்பூ சாகுபடி செய்ய முடியுமா? நெற்பயிருக்கு தேவையான தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகம் விவசாயிகள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் அதிகாரிகள் நெற்பயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து தண்ணீர் வழங்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விவசாயிகள் கூட்டத்தில்கூட குமரி மாவட்ட பாசனத்துக்காக அணைகளில் இருந்து ஜூன் 4-ந் தேதி தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன் ஜூன் 4-ந் தேதி முதல் குமரி மாவட்ட அணைகளில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்தது.

அதன்படி நேற்று பாசனத்துக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. தண்ணீர் திறப்பதற்கு முன் பெருஞ்சாணி அணையில் பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, விஜயகுமார் எம்.பி. ஆகியோர் பெருஞ்சாணி அணையின் ஷட்டரை, மின்மோட்டார் பொத்தானை அழுத்தி திறந்து வைத்தனர்.

நேற்றைய நிலவரப்படி 62.50 அடியாக இருந்த பெருஞ்சாணி அணையின் மதகில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்தோடியது. அணை திறப்பின் முதல் நாளான நேற்று வினாடிக்கு 850 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. பின்னர் அணையில் இருந்த நீரில் கலெக்டர் மற்றும் விஜயகுமார் எம்.பி., அதிகாரிகள், விவசாய சங்க நிர்வாகிகள் மலர்கள் மற்றும் நவதானியங்களை தூவினர்.

பின்னர் கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

குமரி மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக முதல்-அமைச்சர் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளில் இருந்து கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்துக்கு இன்று (அதாவது நேற்று) முதல் நீர் திறக்க ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 850 கன அடி வீதம் நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கோதையாறு மற்றும் பட்டணங்கால் அமைப்பில் உள்ள தோவாளை கால்வாய், அனந்தனார் கால்வாய், நாஞ்சில்நாடு புத்தனார் கால்வாய், பத்மநாபபுரம் கால்வாய் மற்றும் பட்டணங்கால் கால்வாய் ஆகியவற்றில் உள்ள 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அணைகளில் இருந்து 28-2-2019 வரை நீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் வறட்சி நிலவியது. இந்த ஆண்டு நமக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து நீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பெருஞ்சாணி அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படுகிறது. இந்த ஆண்டு அதிக மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் விவசாயிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

கால்வாய் பராமரிப்பு பணிகளை கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தொடங்கினார்கள். இந்த வாரத்தில் வேலைகள் முடிந்து விடும். 2 மாதங்களுக்குப்பிறகு பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் சேமிக்கும் பணி தொடங்கும். பேச்சிப்பாறை அணையை தூர்வாருவது சம்பந்தமாக அரசின் பரிசீலனையில் உள்ளது. பேச்சிப்பாறை அணையில் உள்ள மணலை விவசாயிகளுக்கு அவர்களது நீண்டகால கோரிக்கையின்படி கொடுக்க மனுக்கள் வழங்குமாறு விவசாயிகளிடம் கூறியுள்ளோம்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரஅமைப்பு) செயற்பொறியாளர் வேதஅருள்சேகர், கோட்ட பொறியாளர் மோகன்தாஸ், உதவி பொறியாளர் செழியன், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி கலையரசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் சகாயம், கனகராஜன், சந்திரன், மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, பத்மதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்