டிரைவரை லத்தியால் போலீசார் தாக்கியதால் லாரிகளை நிறுத்தி போராட்டம்

வாணியம்பாடியில் லாரி டிரைவரை போலீசார் லத்தியால் தாக்கியதால் அதனை கண்டித்து லாரிகளை சாலையின் குறுக்காக நிறுத்தி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-06-04 22:45 GMT
வாணியம்பாடி,

திருப்பத்தூரில் கடந்த ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக சேலம் உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்லும் லாரிகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அந்த வழியாக செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அதன் எதிரொலியாக வாணியம்பாடி செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகளை சாலையின் ஓரமாக நிறுத்தி வைத்து பின்னர் இரவு 8 மணிக்கு அந்த லாரிகள் திருப்பத்தூர் வழியாக செல்வது வழக்கமாக இருந்தது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான லாரிகள் சென்றதால் நடந்த தொடர் விபத்துகள் காரணமாக பலர் உயிர் இழந்தனர்.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், பிற்பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திருப்பத்தூர் நகருக்கு கனரக வாகனங்கள் செல்ல கூடாது என திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா உத்தரவிட்டார்

இந்த நிலையில் சென்னையில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வாணியம்பாடி வழியாக வந்தது. அந்த லாரியை சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த சுந்தரம் (வயது 55) ஓட்டி வந்தார். செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதிக்கு வந்தபோது லாரியை போலீசார் தடுத்தனர்.

உடனே லாரியை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு வருவதாக டிரைவர் சுந்தரம் கூறியுள்ளார். ஆனால் அதனை கேட்காத போலீசார் லாரியை நிறுத்த சொல்லியும் ஏன் எடுத்து செல்கிறாய் என கூறி அவரை போலீசார் லத்தியால் தாக்கியுள்ளனர். இதில் சுந்தரத்தின் இடதுகை மணிக்கட்டு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை கண்ட ஏற்கனவே அங்கி நின்றிருந்த லாரிகளின் டிரைவர்கள் போலீசாரிடம் ஏன் அவரை தாக்கினீர்கள் என ஏட்டு சிவமூர்த்தி மற்றும் போலீசாரிடம் டிரைவர்கள் கேட்டனர்.

ஆனால் போலீசார் சரிவர பதில் கூறாததால் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர்கள் தங்களது லாரிகளை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும், வாணியம்பாடி - சேலம் சாலையிலும் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து லாரியை டிரைவர்கள் ஒழுங்குபடுத்தி நிறுத்தினர். அதன்பின் பிரச்சினை முடிவுக்கு வந்தது. 

மேலும் செய்திகள்