தென்காசியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-06-04 22:45 GMT
நெல்லை,

தென்காசியில் கிராமப்புற தபால் ஊழியர்கள் சம்பள உயர்வு மற்றும் கமலேஷ் சந்திரா ஊதிய குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 14-வது நாளாக தென்காசி தலைமை தபால் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். கிராமிய தபால் ஊழியர்கள் சங்க கோட்ட தலைவர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் கோமதி நாயகம், செயலாளர் பூராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அம்பையில் தபால் ஊழியர்கள் நேற்று 14-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அம்பை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகி காசி விசுவநாதன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தபால் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

சங்கரன்கோவிலில் கடந்த 22-ந் தேதி முதல் கிராமப்புற தபால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக நேற்று கிராமப்புற தபால் ஊழியர்கள் தங்களது உடலில் தீருநீறு பூசி அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்க தலைவர் அனஞ்சி தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் திரளான தபால் ஊழியர்கள் பங்கேற்றனர். 

மேலும் செய்திகள்