புதுச்சேரி சட்டசபையில் நாராயணசாமியுடன் ரங்கசாமி நேரடி மோதல்

புதுவை சட்டசபையில் முதல்–அமைச்சர் நாராயணசாமியுடன், ரங்கசாமி நேரடி மோதலில் ஈடுபட்டார். ‘அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாமல் கூட்டம் நடத்துவது ஏன்?’ என்று அவர் கேட்டார்.

Update: 2018-06-05 00:00 GMT

புதுச்சேரி,

புதுவை சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியதும் முன்னாள் எம்.எல்.ஏ. பெரியநாயகசாமி, முன்னாள் எம்.பி. வி.பி.எம். சாமி ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி சரக்கு மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளை சட்டசபையில் வைத்தார்.

அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று பேசினார்கள். முதல்–அமைச்சர் நாராயணசாமியும், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியும் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ரங்கசாமி: இந்த ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டமன்ற கதவும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. அறிவித்த திட்டங்களையாவது நிறைவேற்றினீர்களா?

நாராயணசாமி: சட்டசபையை யாரும் மூடிவைக்கவில்லை. சட்டசபைக்கு வந்து 5 நிமிடம் பேசிவிட்டு உடனே வெளியே செல்லக்கூடாது. சட்டசபையில் இருந்து மக்கள் பிரச்சினைகளை பேசுங்கள்.

அமைச்சர் கந்தசாமி: சட்டசபையை மூடி வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டுகிறீர்கள். பின்னர் எப்படி நீங்கள் உள்ளே வந்தீர்கள்?

நாராயணசாமி: உங்களை மக்கள் எதிர்க்கட்சியாக அங்கீகரித்துள்ளார்கள். சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசுங்கள். அதற்காகத்தான் சட்டமன்றம் கூட்டப்பட்டுள்ளது.

டி.பி.ஆர்.செல்வம் (என்.ஆர்.காங்): விவசாயிகளுக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. கூட்டுறவு சர்க்கரை ஆலையைக்கூட மூடிவிட்டார்கள்.

என்.எஸ்.ஜே.ஜெயபால் (என்.ஆர்.காங்): சட்டம் ஒழுங்கு முழுவதும் கெட்டுவிட்டது. நாளும் ஒரு அசம்பாவித செயல் நடக்கிறது.

அரசு கொறடா அனந்தராமன்: உட்கார்ந்து பேசுங்கள். வெளிநடப்பு செய்யத்தான் உங்களுக்கு மக்கள் வாக்களித்தார்களா?

ரங்கசாமி: மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகளுக்காக அறிவித்த நிதியை வழங்கினீர்களா? சட்டமன்ற கூட்டங்களில் அறிவித்த திட்டங்களையாவது நிறைவேற்றினீர்களா? அதை நிறைவேற்றாமல் ஏன் கூட்டம் நடத்துகிறீர்கள்? இந்த அரசை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.

இவ்வாறு கூறிவிட்டு ரங்கசாமி சட்டசபையைவிட்டு வெளியேறினார். அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான டி.பி.ஆர்.செல்வம், என்.எஸ்.ஜே.ஜெயபால், அசோக் ஆனந்து, சுகுமாரன், கோபிகா ஆகியோரும் வெளியேறினார்கள்.

அமைச்சர் கமலக்கண்ணன்: எதிர்க்கட்சி தலைவர் நீண்ட காலம் ஆளுங்கட்சியாகவும், முதல்–அமைச்சராகவும் இருந்துவிட்டார். இவருக்கு எதிர்க்கட்சியாக இருந்த பயிற்சி இல்லை. அதனால் எதிர்க்கட்சியாக அவரால் செயல்படமுடியாது. மக்கள் பணிகளையும் அவர் செய்யப்போவதில்லை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

மேலும் செய்திகள்