வளாகத்தில் உள்ள பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றக்கோரி பள்ளியை முற்றுகையிட்ட மாணவ–மாணவிகளின் பெற்றோர்

மங்கலம் அருகே பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றக்கோரி, அந்த பள்ளியை மாணவ–மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;

Update: 2018-06-04 22:30 GMT

மங்கலம்,

மங்கலத்தை அடுத்த நடுவேலம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 120 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்திலேயே 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான பயன்படுத்தப்படாத கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் பழமையான கட்டிடத்தை ஒட்டியே கழிவறையும், குடிநீர் தொட்டியையும் பயன்படுத்த பழமையான கட்டிடத்தை கடந்து செல்லவேண்டியுள்ளது.

மேலும் தற்போது கோடை மழை பெய்துவருவதால் பழமையான கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து பள்ளி மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் நடுவேலம்பாளையம் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே மாணவ–மாணவிகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதுதொடர்பாக பள்ளிக்கட்டிடத்தை இடிக்க வேண்டி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடமும், கலெக்டரிடமும் பொதுமக்கள் பலமுறை மனுடுத்தனர். ஆனால் பழமையான கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ–மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நேற்றுகாலை பா.ஜ.க. பல்லடம் ஒன்றிய தலைவர் நாராயணசாமி தலைமையில் அந்த பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல்அறிந்த மங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின் பொதுமக்கள் உடனடியாக பழமையான பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும் இந்த கட்டிடத்தை இடிக்கும் வரை பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறினர்.

பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், வட்டாரக்கல்வி அலுவலர் சின்னக்கண்ணு, பல்லடம் ஒன்றிய செயற்பொறியாளர் கோகுல், நில வருவாய் அதிகாரி பபிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பல்லடம் வட்டாரவளர்ச்சி அலுவலர் வில்சன் இன்னும் 2 வாரத்தில் பழமையான பள்ளிக்கட்டிடம் இடித்து அகற்றப்படும் என கூறியதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

2 வார காலத்திற்குள் பழமையான கட்டிடத்தை இடித்து அகற்றாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்