ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கண்களில் கருப்பு துணி கட்டி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-06-04 22:30 GMT

ஈரோடு,

சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். பெண் சத்துணவு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் கே.தனுஷ்கோடி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பழனிசாமி, வேலுசாமி, சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கிடு ஆகியோர் பேசினார்கள். இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் தங்களது கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில செயலாளர் உஷாராணி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ஏ.முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் செல்வி, கோமதி, தேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்