ஆதிவாசி கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள குழு அமைப்பு, கலெக்டர் தகவல்

ஆதிவாசி கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டு உள்ளதாக பந்தலூரில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

Update: 2018-06-04 22:00 GMT

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு 82 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தின் கடைகோடியில் பந்தலூர் தாலுகா அமைந்துள்ளது. இதனால் நலத்திட்ட உதவிகள் தகுதி உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நான் நேரடியாக கலந்து கொள்கிறேன். ஆதிவாசி மக்களுக்கு நேரடியாக சென்று சாதி சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆதிவாசி கிராமங்களில் சாலை, தொகுப்பு வீடுகள், நடைபாதை உள்பட அடிப்படை வசதிகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாத ஆதிவாசி கிராமங்களில் பணிகள் மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு கிராமங்களில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும். நில உடமை சான்று ஆன்–லைன் மூலமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜென்ம நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தால் அந்தந்த துறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் சேரம்பாடி, எருமாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு 175 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். மனுக்களை பெற்ற கலெக்டர் அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

நிகழ்ச்சியில் ஜென்மம் மாவட்ட வருவாய் அலுவலர் பாபு, பந்தலூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்

கூடலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. முருகையன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அந்தந்த துறை அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் தாசில்தார் ரவி உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குந்தா தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கினார். குந்தா தாசில்தார் ஆனந்தி முன்னிலை வகித்தார். இதில் கீழ்குந்தா, மேல்குந்தா, கிண்ணக்கொரை, பாலகொலா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களிடம் இருந்து 40 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 17 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மற்றும் ஒரு பயனாளிகளுக்கு விதவை சான்று வழங்கப்பட்டது. ஜமாபந்தியில் தனி தாசில்தார் மகேஸ்வரி, வட்டவழங்கல் அலுவலர் சிராஜ் நிஷா, வருவாய் ஆய்வாளர்கள் துரைசாமி, ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில், கோத்தகிரி தாசில்தார் தனபாக்கியம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஊட்டி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு ஆர்.டி.ஓ. சுரேஷ் தலைமை தாங்கினார். தாசில்தார் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். தூனேரி உள்வட்டத்தை சேர்ந்த தும்மனட்டி, எப்பநாடு, கக்குச்சி, கூக்கல், தூனேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, பஸ் வசதி, குடிநீர் தொட்டி, பசுமை வீடு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 125 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 19 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது அடுத்த 48 மணி நேரத்திற்குள் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. கூக்கல் கிராமத்தை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா வழங்கப்பட்டது. ஊட்டி தாசில்தார் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சோலூர் உள்வட்டத்திற்கும், நாளை (புதன்கிழமை) ஊட்டி உள்வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்