மாவட்டம் முழுவதும் மதுவிற்ற 67 பேர் கைது கலெக்டர் உத்தரவால் நடவடிக்கை

தேனி மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மதுவிற்பனை செய்த 67 பேரை போலீசார் கைது செய்தனர். கலெக்டர் உத்தரவை தொடர்ந்து போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.;

Update: 2018-06-04 22:00 GMT

தேனி,

தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்வதும், திறந்த வெளியில் மதுபானம் அருந்துவதும் அதிகரித்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளிலும், பஸ் நிலையம், கோவில்கள் அருகிலும் மதுவிற்பனை நடக்கிறது. சில இடங்களில் பள்ளிக்கூடம் அருகிலும் மதுபானம் விற்பனையில் சிலர் ஈடுபடுகின்றனர். அதேபோல், டாஸ்மாக் மதுபான பார்களை குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே திறந்து வைத்து மதுவிற்பனை செய்யும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இந்த புகார்களை தொடர்ந்து அனுமதியின்றி மதுவிற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதன்பேரில் நேற்று முன்தினம் ரோந்து பணிகள் மேற்கொண்டு அனுமதியின்றி மதுவிற்பனை செய்வோரை கைது செய்ய அனைத்து போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர்களுக்கும் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். சில இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் இணைந்தும் ரோந்து பணிகள் மேற்கொண்டனர். அப்போது தேனி சுடுகாடு அருகில் மதுவிற்பனை செய்ததாக அல்லிநகரம் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜாங்கம் (வயது 61) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 17 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அரண்மனைப்புதூர் கோட்டைப்பட்டியில் மதுவிற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மாவட்டம் முழுவதும் மதுபானம் விற்பனை செய்ததாக ஒரே நாளில் 67 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 764 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்