நடுவழியில் நின்ற சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரெயில்

என்ஜின் பழுதானதால் சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரெயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அந்த ரெயில் 2¼ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Update: 2018-06-03 23:20 GMT
சேலம்,

சேலத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் ரெயில் என்பதால் எப்போதும் ரெயிலில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

அந்த வகையில் நேற்று காலை 9.45 மணிக்கு சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரெயில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து விருத்தாசலத்திற்கு புறப்பட்டது. ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பின்னர் 9.55 மணிக்கு செவ்வாய்பேட்டை சத்திரம் மார்க்கெட் ரெயில் நிலையத்திற்கு பயணிகள் ரெயில் வந்தது. பிறகு மீண்டும் அந்த ரெயில் புறப்பட தயாரானபோது, திடீரென என்ஜின் பழுதானது. இதனால் ரெயிலை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் நடுவழியில் பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ரெயில்வே பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பழுதான என்ஜினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பழுதை சரி செய்ய காலதாமதம் ஆனதால் மதியம் 12 மணி வரை அந்த ரெயில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பிறகு 12.15 மணிக்கு மாற்று என்ஜின் கொண்டு வந்து பொருத்தப்பட்டு ரெயில் விருத்தாசலத்திற்கு இயக்கப்பட்டது. 2¼ மணி நேரத்திற்கு மேலாக ரெயில் தாமதம் ஆகி இயக்கப்படாமல் இருந்ததால் ரெயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் செவ்வாய்பேட்டை பகுதிக்கு மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். ஆனால் ரெயில் புறப்பட 2¼ மணி நேரம் தாமதமானதால் அவர்கள் அவதிப்பட்டனர்.

மேலும் செய்திகள்