ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்பதில் தவறு இல்லை சுஷில் குமார் ஷிண்டே கருத்து

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்பதில் தவறு எதுவும் இல்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார்.

Update: 2018-06-03 23:03 GMT
நாக்பூர், 

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்பதில் தவறு எதுவும் இல்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்

பா.ஜனதா கட்சியின் தாய் கழகமாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் இளைஞர்களுக்கான ‘சங் சிக்‌ஷா வார்க்’ எனப்படும் பயிற்சி முகாம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி முகாம் வருகிற 7-ந் தேதி நிறைவு பெறுகிறது.

இந்தநிலையில் ‘சங் சிக்‌ஷா வார்க்’ நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக மூத்த காங்கிரஸ் தலைவராக திகழ்ந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அழைப்பை பிரணாப் முகர்ஜி ஏற்கலாமா? வேண்டாமா? என கேள்வி எழுந்தது. இதைத்தொடர்ந்து விழாவில் பங்கேற்பதற்கு பிரணாப் முகர்ஜி சம்மதம் தெரிவித்தார்.

இதற்கிடையே நாக்பூரில் நிருபர்களை சந்தித்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை மந்திரியுமான சுஷில் குமார் ஷிண்டே இது குறித்து கூறியதாவது:-

தவறு இல்லை

பிரணாப் முகர்ஜி மதச்சார்பற்றவர். அவர் தான் பங்கேற்கும் நிகழ்ச்சியிலும் தனது மதச்சார்பின்மை கொள்கைகளையே முன்னிறுத்துவார்.

ஆர்.எஸ்.எஸ். அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டதில் தவறு எதுவும் இல்லை. பிரணாப் முகர்ஜி ஒரு சிறந்த சிந்தனையாளர். அவர் ஆர்.எஸ்.எஸ். மேடைக்கு சென்று பேச இருப்பதே இங்கு முக்கியம். அவரது கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை மேம்படுத்துமானால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்