கல்வீசி அரசுபஸ் கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது - பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்

திருப்பூரில் கல்வீசி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த தொழிலாளியை, பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

Update: 2018-06-03 23:02 GMT
திருப்பூர்,

திருப்பூர் 60 அடி ரோட்டில் நேற்று குடிபோதையில் இருந்த ஆசாமி ஒருவர், அந்த வழியாக சென்ற பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதை பார்த்து எரிச்சல் அடைந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்தஆசாமியிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். குடிபோதையில் இருந்த அந்த ஆசாமி, பொதுமக்களை தகாதவார்த்தைகளால் திட்டியதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அந்த போதை ஆசாமியை பிடித்து அடித்து உதைத்தனர்.

இதையடுத்து அந்த போதை ஆசாமி பொதுமக்கள் மீது கற்களை வீசியுள்ளார். அப்போது அந்த வழியாக தேனி மாவட்டத்தில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்துள்ளது. ஆத்திரத்தில் இருந்த போதை ஆசாமி அந்த பஸ்சின் மீதும் கற்களை வீசியுள்ளார். அதில் ஒரு கல் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது விழுந்தது. இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதனால் பஸ்சின் உள்ளே இருந்த பயணிகள் அலறினார்கள்.

இதையடுத்து பஸ்சின் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இதனால் மேலும் கோபம் அடைந்த அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும், பஸ்சில் இருந்த பயணிகளும் அந்த போதை ஆசாமியை பிடித்து மீண்டும் அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட அந்த ஆசாமியை பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அந்த ஆசாமி மதுரை மாவட்டத்தை சேர்ந்த கணேசன்(வயது 41) என்பதும், இவர் திருப்பூரில் 60 ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வெல்டிங் வேலைக்காக வந்ததும், இந்த நிலையில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குடி போதையில் இருந்த கணேசன் ரோட்டில் சென்ற பொதுமக்களுடன் தகராறில் ஈடுபட்டதும், பஸ் மீது கல் வீசி கண்ணாடியை உடைத்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்