விவசாயிகளைவிட சிறந்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது - கல்லூரி விழாவில் கலெக்டர் பேச்சு

விவசாயிகளை விட சிறந்தவர்கள் இந்த உலகில் வேறுயாரும் இருக்க முடியாது என்று கல்லூரி விழாவில் கலெக்டர் கந்தசாமி பேசினார்.

Update: 2018-06-03 23:15 GMT
தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டை அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் 4-ம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி, கல்லூரியின் முன்னாள் முதல்வர் பிரசாத், மாணவர் நல அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் தங்கபாண்டியன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டு பேசினார்.

வேகமாக செல்லும் இந்த காலத்தில் அதற்கு தகுந்தாற்போல் உங்களை தயார்படுத்தி முன்னேற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டும். விவசாயத்தை முன்னிலைபடுத்தி அதற்கு தகுந்தாற்போல் விவசாயத்தில் முன்னேற்றம் காணவேண்டும். படிப்புகளில் பல்வேறு துறைகள் இருந்தாலும் வேளாண்மை மாணவர்களாகிய நீங்கள் விவசாயத்தை பல்வேறு ஆராய்சிகள் மூலம் முன்னேற்ற வேண்டும்.

விவசாயிகளை விட சிறந்தவர்கள் இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. அவர்களுக்கு என்ன பிரச்சினைகள் உள்ளது என்று நன்கு அறிந்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் படித்த புத்தகத்தை பாதுகாத்து வையுங்கள். அதனை மீண்டும் படித்து பாருங்கள். நீங்கள் முன்னேறுவதற்கு நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாணவர் பிரதிநிதி சந்தோஷ்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் ஜமுனா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்