கர்நாடகத்தில் பலத்த மழைக்கு சகோதரர்கள் உள்பட 5 பேர் சாவு அரசு ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி

கர்நாடகத்தில் பெய்த பலத்த மழைக்கு சகோதரர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள்.

Update: 2018-06-03 22:30 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் பெய்த பலத்த மழைக்கு சகோதரர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். கொப்பலில் அரசு ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

சகோதரர்கள் சாவு

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பெங்களூருவில் தினமும் மாலையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்கிறது. நேற்று மாலையில் பெங்களூரு நகர் முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் மடிவாளா, கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இந்த நிலையில், சோழதேவனஹள்ளி அருகே தாசேனஹள்ளியை சேர்ந்த முனிராஜ்(வயது 20) என்பவர் தனது சகோதரர் ரவியுடன்(18) மாடுகளுக்கு புற்கள் அறுக்க தோட்டத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் வயரில் முனிராஜ், ரவி ஆகியோர் தெரியாமல் மிதித்து விட்டார்கள். இதனால் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்கள். உயிருக்கு போராடிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்கள். இதுகுறித்து சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர்...

பெங்களூரு புறநகரில் நேற்று முன்தினம் பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் நாராயணபுராவை சேர்ந்த கவுரம்மா(56) என்பவர் பலியானார். சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த மழையால் மரம் முறிந்து விழுந்ததில் அஞ்சும்(24) என்பவர் தலையில் பலத்தகாயம் அடைந்து இறந்து விட்டார். பெலகாவி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பூடாராமனஹட்டி கிராமத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் இம்ரான் நடாப்(24) அடித்து செல்லப்பட்டார். அவரது உடலை நேற்று போலீசாரும், தீயணைப்பு படையினரும் போராடி மீட்டனர்.

கொப்பல் மாவட்டம் கங்காவதியில் நேற்று மதியம் கொட்டி தீர்த்த மழையால், அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். மேலும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்காததால் மிகுந்த அவதிக்கு உள்ளானார்கள். ராமநகர் மாவட்டத்தில் கொட்டிய கனமழைக்கு 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்