தொழில் அதிபர் வீட்டில் 300 பவுன் நகை திருட்டு: ரூ.10 லட்சம் ரொக்கம், வெள்ளிப்பொருட்களையும் அள்ளிச்சென்றனர்

தொழில் அதிபர் வீட்டில் ரூ.300 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.;

Update:2018-06-04 04:00 IST

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில முத்தியால்பேட்டை செயிண்ட் ரொசாரியோ வீதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் மரக்காணம் அருகே அனுமந்தையில் இறால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

இவருக்கு கோட்டக்குப்பத்திலும் சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் வார இறுதிநாட்களில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சரவணன் சென்று தங்குவது வழக்கம். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் சரவணன் தனது குடும்பத்தினருடன் கோட்டக்குப்பம் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார்.

நேற்று காலை அவர் மீண்டும் முத்தியால்பேட்டை வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கிரில் கேட் பூட்டும், மெயின் கதவு பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் திடுக்கிட்ட அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அலமாரி திறக்கப்பட்டு அங்கிருந்த 300 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் 5 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டிருந்தது கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து அவர் முத்தியால்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.

சம்பவம் நடந்த வீடு மக்கள் நடமாட்டம் மிகுந்த தொடர்ச்சியாக வீடுகள் உள்ள பகுதியாகும். திருட்டு நடந்த வீட்டில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்