கோவை–பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மார்ச் மாதம் முடியும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்

கோவை–பொள்ளாச்சி இடையே ஈச்சனாரியில் மேம்பாலம் அமைய உள்ளதால் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மார்ச் மாதம் முடிவடையும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறினார்.

Update: 2018-06-03 22:15 GMT

கிணத்துக்கடவு,

கோவை ஈச்சனாரி முதல் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி வரை 26.85 கிலோமீட்டர் தூரம் உள்ளசாலை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. இந்த பணிக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ரூ. 414.90 கோடியை ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தில் கிணத்துக்கடவு ஊருக்குள் 2.25 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம், ஒத்தக்கால் மண்டபத்தில் 1.25 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம், பொள்ளாச்சி–கிணத்துக்கடவு இடையே உள்ள முள்ளுப்பாடி ரெயில்வே கேட் பகுதியில் ஆயிரத்து 200 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் கிணத்துக்கடவு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி, கிணத்துக்கடவு பஸ் நிலையம் முதல் பொன்மலை வேலாயுதசாமி கோவில் மலையடிவாரம் வரை நிறைவு பெற்றுள்ளது. அதேபோல் மேம்பாலத்திற்கு கீழ் தார்சாலை அமைக்கும் பணிகளும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த பகுதியில் இன்னும் ஒரு கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறவேண்டியுள்ளது. இதற்கு தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவு பெற்றன. அதேபோல் ஒத்தக்கால்மண்டபத்தில் தண்ணீர்பந்தல் பஸ் நிறுத்தம் பகுதியில் மேம்பாலம் அமைக்க தூண்கள்நிறுவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் பொள்ளாச்சி முதல் கிணத்துக்கடவு வரை கான்கிரீட் சாலை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஒருசில பணிகள் மட்டும் முடிவுபெறாமல் உள்ளன. அந்த பணிகளும் விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் பொள்ளாச்சி –கிணத்துக்கடவு இடையே 4 வழிச்சாலையில் ஒருபுறத்தில் மட்டும் வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தனியார் மற்றும் அரசு பஸ்கள், கார், லாரி, மோட்டார் சைக்கிள்கள் நெடுஞ்சாலைத்துறை அனுமதிக்காத வழித்தடங்களில வாகனங்கள் வேகமாக செல்வதால் ஏராளமான விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரி கூறியதாவது:–

கோவை–பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 26.85 கிலோ மீட்டர் தூரத்தில் 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பணிகள் முடிவு பெற்றுள்ளன. மீதி உள்ள 8.85 கிலோமீட்டர் தூரசாலை அமைக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது கோவை–பொள்ளாச்சி சாலையில் ஒருபகுதியில் மட்டும் வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து வாகனங்களும் முறையில்லாமல் சென்று வருகிறது. இதுகுறித்து மோட்டார் வாகன அதிகாரிகளுக்கும், காவல் துறைக்கும் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

4 வழிச்சாலை அமைக்கும்பணி நடைபெற்று வருவதால் வாகனங்கள் அனைத்தும் 30 கிலோமீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும் என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை வாகன ஓட்டிகள் மதிப்பதில்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க வாகன ஓட்டிகள் கோவை–பொள்ளாச்சி இடையே நடைபெற்று வரும் 4 வழிச்சாலை பணிகள் முடியும் வரை நெடுஞ்சாலைத்துறை 30 கிலோமீட்டர் வேகத்தில் அனுமதிக்கப்பட்ட சாலையில் செல்லவேண்டும்.

ஏற்கனவே 2018 நவம்பர் மாதம் இறுதியில் இந்த பணிகள் முடிய திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது கோவை ஈச்சனாரி பகுதியில் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு 36 கோடி செலவில் மேம்பாலம் அமைய உள்ளதால் கோவை–பொள்ளாச்சி இடையே உள்ள 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் முடிய கூடுதலாக 4 மாதங்கள் ஆகும். இந்த பணிகள் அனைத்தும் 2019–ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் முடியும், என்றார்.

கோவை–பொள்ளாச்சி வழித்தடத்தில் ஈச்சனாரி பகுதியில் முகூர்த்தம் மற்றும் விசே‌ஷ காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமம் அடைந்து வந்தனர். தற்போது தேசிய நடுஞ்சாலைத்துறை ஆணையம் ஈச்சனாரியில் பாலம் கட்ட திட்டமிட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்