மண்வள அட்டையை பெற்று விவசாயிகள் பயன்பெற வேண்டும் கலெக்டர் அறிவுரை

மண்வள அட்டையை பெற்று விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2018-06-03 22:15 GMT

விழுப்புரம்,

மண்வளத்தை பாதுகாத்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு, அனைத்து விவசாயிகளுக்கும் மண் பரிசோதனை செய்து மண்வள அட்டைகளை வழங்கி வருகிறது. உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க செய்வதில் நீர்வளம், மண்வளம், மண்ணின் தன்மை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. பயிர் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளிட்ட 20 வகையான சத்துக்கள் தேவைப்படுகிறது.

இந்த சத்துக்கள் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும். ஒரு பயிருக்கான உரத்தேவையை கணக்கிடுவதற்கு மண்ணில் உள்ள சத்துக்களின் அளவை அறிய மண் பரிசோதனை அவசியமாகும். மண் பரிசோதனை மூலம் நிலத்தில் உள்ள சத்துக்களின் அளவை அறிந்து உரமிட மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மண்வள அட்டை மத்திய, மாநில அரசுகள் நிதி உதவியுடன் 2015–ம் ஆண்டு இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டு இரு வருட சுழற்சி முறையில் 2015–16, 2016–17 முதல் சுழற்சி மற்றும் 2017–18, 2018–19 இரண்டாம் சுழற்சி விவசாயிகளின் வயல்களில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண் ஆய்வு செய்து மண்வள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் முதல் சுழற்சியில் மொத்தம் 67 லட்சத்து 67 ஆயிரம் விவசாயிகளுக்கும், இரண்டாம் சுழற்சியில் 19 லட்சத்து 22 ஆயிரம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 2018–19–ம் ஆண்டு நிறைவில் மேலும் பல விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த மண்வள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள உர சிபாரிசின்படி பயிருக்கு தேவையான உரம் இடுவதால் உரச்செலவு குறைவதோடு மண்வளமும் பாதுகாக்கப்படும். சமச்சீரான உரம் இடுவதன் மூலம் மகசூல் கணிசமாக அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு விவசாயியும் மண்வள அட்டையை பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்