மஞ்சூர் பகுதி தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதல்
மஞ்சூர் பகுதியில் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களுக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.;
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்கி வருவது தேயிலை விவசாயம். இதனை நம்பி சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும், ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி நோய் தாக்கியதால் தேயிலை மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தொட்டகம்பை, பிக்கட்டி, காந்தி கண்டி,எடக்காடு, கீழ்குந்தா, பெங்கால் மட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதல் காணப்படுகிறது.
இந்த நோய் தாக்கிய தேயிலை செடிகளின் இலைகள் பச்சை நிறம் மாறி பழுப்பு நிறமாக £ட்சியளிக்கிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:–
நீலகிரியில் பெய்த கோடை மழை காரணமாக பச்சை தேயிலை மகசூல் அதிகரித்தது. ஆனால் தற்போது தேயிலை செடிகளை சிவப்பு சிலந்தி நோய் தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த செடிகளில் பச்சை தேயிலை பறிக்கும் விவசாயிகளுக்கு கண் எரிச்சல், உடல் அரிப்பு ஏற்படுகிறது.
ஏற்கனவே நாங்கள் பச்சை தேயிலைக்கு போதிய விலை இன்றி அவதி அடைந்து வருகிறோம். இதில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதல் காரணமாக எங்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாத நிலை உள்ளது. விரைவில் பருவமழை தொடங்க உள்ளதால் செடிகளுக்கு உரமிட வேண்டும்.
எனவே தேயிலை வாரிய அதிகாரிகள் சிவப்பு சிலந்தி நோய் தாக்கிய பகுதிகளை ஆய்வு செய்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.