நாகர்கோவிலில் ரே‌ஷன்கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் முறையாக பொருட்கள் வழங்ககோரிக்கை

நாகர்கோவிலில், முறையாக ரே‌ஷன்பொருட்கள் வழங்ககோரி ரே‌ஷன்கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.;

Update: 2018-06-03 22:45 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் நெசவாளர் காலனியில் ரே‌ஷன்கடை ஒன்று உள்ளது. இந்த ரே‌ஷன்கடையை அதன் பணியாளர்கள் சரிவர திறப்பதில்லை என தெரிகிறது. இதனால், அந்த ரே‌ஷன்கடையில் பொருட்கள் வாங்கிவந்த அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலையில், பொருட்கள் வாங்குவதற்காக அப்பகுதி மக்கள் ரே‌ஷன்கடைக்கு வந்தனர்.

ஆனால் நீண்டநேரமாகியும் ரே‌ஷன்கடையை திறக்க அதன் பணியாளர்கள் வராததால் அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். இந்தநிலையில் காலை 11 மணி அளவில் ரே‌ஷன்கடையை திறக்க பணியாளர்கள் வந்தனர்.

முற்றுகை

அவர்கள் பொருட்கள் வழங்குவதற்கு ஆயத்தமான போது, ஸ்மார்ட் ரே‌ஷன்கார்டுகளில் பொருள் வழங்கப்பட்டதை பதிவு செய்ய பயன்படும் எந்திரம் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால், ரே‌ஷன்பொருட்களை வழங்க முடியாது என பணியாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், முன்னறிவிப்பு இன்றி ரே‌ஷன் கடையை மூட எதிர்ப்பு தெரிவித்தும், ரே‌ஷன்பொருட்களை முறையாக வழங்க வலியுறுத்தியும் கடையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரிக்கும், நேசமணிநகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே வட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகளும் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கடையில் முறையாக ரே‌ஷன்பொருட்கள் வழங்கவும், பணியாளர்கள் சரியான நேரத்திற்கு கடைக்கு வந்து பணிபுரியவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதைதொடர்ந்து, காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 12.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. இதையடுத்து ரே‌ஷன்கடையில் அரிசி, சர்க்கரை ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்