நாகர்கோவிலில் கடத்தப்பட்ட வக்கீல் குமாஸ்தா மனைவியை 5 நாட்களுக்கு பிறகு விடுவித்த மர்மஆசாமிகள்

நாகர்கோவிலில் கடத்தப்பட்ட வக்கீல் குமாஸ்தா மனைவியை 5 நாட்களுக்கு பிறகு மர்ம ஆசாமிகள் விடுவித்தனர்.

Update: 2018-06-03 23:15 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் வடிவீஸ்வரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற ரமேஷ் (வயது 45). வக்கீல் குமாஸ்தாவாக உள்ளார். இவருடைய மனைவி தங்கம் (39), மகளிர் சுயஉதவிக்குழு தலைவியாக உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 12–ந்தேதி அதிகாலையில் ரமேஷின் வீடு புகுந்து பீரோவில் இருந்த 33 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

மேலும், ‘வீட்டுக்கதவை திறந்து வைத்ததற்கு நன்றி, என்னுடைய ஆவணங்களை திரும்ப கொடுக்க வேண்டும். இல்லையெனில் உன் வீட்டில் உள்ளவர்களை கடத்தி செல்வேன்‘ என்று எழுதப்பட்டு இருந்த மிரட்டல் கடிதத்தையும் மர்ம ஆசாமிகள் வீட்டில் விட்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 29–ந்தேதி மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்தவர்களுக்கு பணம் கொடுப்பதற்காக தங்கம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது அவரை மர்ம ஆசாமிகள் கடத்தி சென்றனர். இந்த சம்பவத்தால் வழக்கில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ரமேஷை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம ஆசாமி ‘உன் மனைவியை கடத்தி வைத்துள்ளோம். போலீசுக்கு சென்றால் உன்னுடைய குழந்தைகளையும் கடத்துவோம்‘ என கூறி மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாகவும் ரமேஷ் மீண்டும் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து, தங்கத்தையும், அவரை கடத்தி சென்ற மர்ம ஆசாமிகள் குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை ரமேசை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம ஆசாமி, ‘உன் மனைவியை ஆரல்வாய்மொழி பஸ் நிறுத்தத்தில் விட்டு செல்கிறோம். அவருக்கு 2 முறை போதை ஊசி போட்டுள்ளதால் அவர் சுயநினைவு இல்லாமல் இருக்கிறார். எனவே வந்து அழைத்து செல்லுங்கள்‘  என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து ரமேஷ், உறவினர்கள் சிலருடன் 5 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட மனைவியை மீட்க ஆரல்வாய்மொழிக்கு சென்றார். அங்கு பஸ்நிறுத்தத்தில் அமர்ந்திருந்த தங்கத்தை பார்த்ததும் ரமேஷ் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் மொட்டை தலையுடன், சித்தபிரமை பிடித்தவர் போல் அமர்ந்திருந்ததை கண்டு அவர்கள் கண்ணீர் வடித்தனர். அதைத்தொடர்ந்து, அவரின் அருகே சென்ற கணவர் மற்றும் உறவினர்களை பார்த்து, யார் நீங்கள்? என்று தங்கம் கேட்டது அவர்களுக்கு மேலும் பேரதிர்ச்சியை தந்தது.

இதையடுத்து, தங்கத்தை ஒருவழியாக சமாதானப்படுத்தி, தனிப்படை போலீசார் உதவியுடன் நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தங்கத்திடம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாய்லட்சுமி விசாரணை நடத்தினார்.

அப்போது ‘சுய உதவிக்குழுவை சேர்ந்தவர்களுக்கு பணம் கொடுக்க சென்ற போது, என்னை மர்ம ஆசாமிகள் கடத்தி சென்றனர். ஆனால் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது பற்றிய விவரம் தெரியாது. ஆரல்வாய்மொழியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து போதை ஊசி போட்டு அடித்து துன்புறுத்தினார்கள்‘ என்று தங்கம் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, தங்கத்தை கடத்தி சென்ற மர்ம ஆசாமிகள் யார்? அவரை கடத்தி சென்ற மர்ம ஆசாமிகளுக்கும், ரமேசுக்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா? அவர்களாகவே தங்கத்தை ஆரல்வாய்மொழியில் விட்டு சென்றது ஏன் என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை தங்கத்திடம் போலீசார் கேட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, ரமேஷிடமும்,  உறவினர்களிடமும் தீவிர விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், தங்கத்தை ஆரல்வாய்மொழியில் இறக்கிவிட்டு சென்ற இடத்தில் வணிக நிறுவனங்கள், கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்