கோடி ரூபாய் சேமித்த சிறுவர்கள்!
மத்தியபிரதேசத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஒரு ரூபாயில் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கி ஒரு கோடி ரூபாய் சேமித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.
பள்ளி மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் அங்குள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 6 ஆயிரம் மாணவர்களின் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் பெற்றோர் கொடுக்கும் பணத்தில் சிறுக சிறுக அதில் சேமித்தார்கள். அந்த தொகை 11 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
இதுபற்றி கூட்டுறவு வங்கியின் முதன்மை செயல் அதிகாரி கிருஷ்ணகுமார் சோனி கூறுகையில், ‘‘2007-ம் ஆண்டு 26 கூட்டுறவு வங்கிக் கிளைகளில் மாணவர்கள் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது. மாணவர்கள் சேமிக்கும் தொகைக்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை டெபாசிட் செய்பவர்களுக்கு கூடுதல் வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த தொகையை உயர்கல்வி பயிலவும், தொழில் தொடங்கவும் மற்றும் திருமண செலவுகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்கிறார்.
இந்த சேமிப்பு முயற்சிக்கு மாணவர்கள் - பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாணவர்கள் ஆர்வமாக தங்கள் வங்கிக்கணக்குகளில் பணம் செலுத்துகிறார்கள். 15 வயதாகும் ஆர்த்தவ் சிகோலே என்ற மாணவர் தனது வங்கி கணக்கில் 19,314 ரூபாய் சேமித்துள்ளார். ‘‘நான் பள்ளியில் சேர்ந்த சில வருடங்களிலேயே சேமிக்க தொடங்கி விட்டேன். பெற்றோர் எனது செலவுக்கு கொடுக்கும் பணத்தின் ஒரு பகுதியை சேமிப்புக்கு ஒதுக்கிவிடுவேன். இப்போது எனது வங்கி கணக்கில் 25,579 ரூபாய் இருக்கிறது’’ என்று ஸ்ரீவாஸ்தவா என்ற மாணவர் பெருமிதம் கொள்கிறார்.