சீட்டுக்கட்டாய் சரியும் தொழில் முதலீடு
ஆசியாவின் ‘டெட்ராய்டு’, அமைதிப்பூங்கா, தொழில் தொடங்க ஏற்ற மாநிலம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் நம் தமிழகத்தில், கடந்த 2 ஆண்டுகளாக தொழில் முதலீடுகள் மிகவும் சரிவடைந்து வருகிறது.
பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்பட்டாலும், தெளிவற்ற தொழில் கொள்கை, தொழில் துறையினர் சுலபமாக அணுக கூடிய சூழ்நிலை இருந்தாலும், அதிரடியாக களம் இறங்கி செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இல்லாத அரசு உயர் அதிகாரிகள் போன்றவை தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கும், வளர்ச்சிக்கும் இடையூறு அளிப்பதாக உள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மற்றும் மராட்டியம் போன்ற மாநிலங்கள் அதிக அளவில் முதலீட்டை ஈர்த்து உள்ளன.
கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அது தண்ணீராக இருந்தாலும், தொழில் முதலீட்டு திட்டங்களாக இருந்தாலும் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு செயல்படுகின்றனர். ஆனால் நம் தமிழ்நாட்டில் பெரிய எதிர்க்கட்சிகள் முதல், முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான்கள் போல் உருவெடுக்கும் கட்சிகள் வரை அமைதியை சீர்குலைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளன என்பதை நாம் அனைவரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
மோட்டார் வாகன துறையில் தமிழகம் தான் தெற்காசியாவின் சந்தைக்கு முக்கிய மையம் என்று சொல்லும் அளவுக்கு அசோக் லைலாண்ட், ராயல் என்பீல்டு, தாபே, டி.வி.எஸ். மோட்டார் போன்ற நிறுவனங்கள் அவற்றின் தொழிற்சாலையுடன் இங்கு பல ஆண்டுகளாக திறம்பட செயலாற்றி வருகின்றன. இவை தவிர போர்டு, ஹூண்டாய், ரணோ-நிஷான், டைம்லர், பாரத்-பென்ஸ், மிட்டுபிஷி போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் இங்கு அதிகமாக முதலீடு மேற்கொண்டு, வாகன உற்பத்தியில் முன்னிலையில் இருப்பதுடன் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அவற்றின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகின்றன.
மேற்கண்ட துறைகள் தவிர தமிழகத்தில் மருந்து, தோல், காற்றாலை, வேளாண்மை, ஜவுளி போன்ற பல துறைகளை சேர்ந்த நிறுவனங்களும் செவ்வனே இயங்கி வருகின்றன.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டில் தமிழக தொழில் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு வெறும் 3 ஆயிரத்து 131 கோடி ரூபாய் மட்டுமே என்பது மிகவும் வருத்தத்துக்குரிய செய்தியாகும். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, கடந்த ஆண்டு நம் நாட்டில் பல மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடு 3.95 லட்சம் கோடி ரூபாய். ஆனால் இந்த முதலீட்டில் தமிழகம் ஈர்த்த முதலீட்டின் அளவு 0.8 சதவீதம் மட்டுமே.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டில் கர்நாடக மாநிலம் ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து முதலிடத்தில் உள்ளது. இது மொத்த முதலீட்டில் 38.4 சதவீதம் ஆகும். இதையடுத்து முறையே குஜராத் ரூ.79 ஆயிரத்து 68 கோடி (20 சதவீதம்), மராட்டியம் ரூ.48 ஆயிரத்து 581 கோடி (12.2 சதவீதம்), உத்தரப்பிரதேசம் ரூ.12 ஆயிரத்து 224 கோடி (3 சதவீதம்) முதலீட்டை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தமிழ்நாட்டில் சர்வதேச தரத்துக்கு இணையான துறைமுகங்கள், விமான நிலையங்கள், மற்ற மாநிலங்களை விட மிகவும் தரமான நெடுஞ்சாலைகள், தடையில்லா மின்சார வசதி என தொழில் தொடங்க ஏதுவான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலை வகித்த தமிழகம், இன்று மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களை விட பின்தங்கி 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், மாநிலம் மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு ஆளும் கட்சியுடன் இணைந்து செயல்பட்டால்தான் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி சிறப்படையும்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) தமிழகத்தின் பங்களிப்பு இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையின் பங்களிப்பு 45 சதவீதம் அளவுக்கும், தயாரிப்பு துறையின் பங்களிப்பு 35 சதவீதம் அளவுக்கும், வேளாண் துறையின் பங்களிப்பு 20 சதவீதம் அளவுக்கும் உள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், பல லட்சம் மாணவர்கள் பல்வேறு படிப்புகளில் பட்டம் பெற்று வெளியே வருகின்றனர். அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ப மாநிலத்தில் தொழில் முதலீடுகளை பெறும் வகையில் சூழ்நிலைகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
கடந்த 2015-ம் ஆண்டு மாநில அரசால் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர். அந்த கூட்டத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அத்திட்டங்களின் நிலை குறித்தும், திட்ட அமலாக்கம் பற்றியும் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
மாநில அரசு தரப்பில், தமிழகத்தில் தொழில் துறை மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் சிப்காட் அமைப்பு, மாநிலத்தின் 12 மாவட்டங்களில் ஒட்டுமொத்த அளவில் 31 ஆயிரத்து 465 ஏக்கரில் 20 தொழிற்பேட்டைகள், 6 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவற்றில் நிலக்கோட்டை, நாங்குநேரி, கங்கைகொண்டான், மானாமதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பேட்டைகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்த பல தொழில் நகரங்கள் உருவாக்கும் வகையில் 9 மாவட்டங்களில் 19 ஆயிரத்து 615 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது தென்தமிழகத்தில் தொழில் வளர்ச்சி சிறப்பான வகையில் அதிகரிக்கும் என அரசு தெரிவித்து உள்ளது.
எது எப்படி இருப்பினும் மாநில அரசு தற்போது மிகவும் சரிவடைந்து போய் உள்ள தொழில் முதலீடுகளை மீண்டும் ஈர்க்க வேண்டும் என்றால், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சரின் நேரடிப் பார்வையில் ஒரு துறையை ஏற்படுத்தி ஒற்றை சாளர முறையின் கீழ் தொழில் முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தருவதுடன், அவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்று நம்பிக்கை ஏற்படும் வகையில் அரசின் கொள்கை திட்டங்கள் அமைய வேண்டும்.
இந்த ஆட்சியில் எஞ்சி இருக்கும் மூன்று ஆண்டுகளில் மாதத்துக்கு ஒரு திட்டம் என்று செயல்பட்டால் கூட குறைந்த பட்சம் 25 முதல் 30 முதலீட்டு திட்டங்களை கவர முடியும். அது நம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதுடன், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதமாகவும் அமையும்.
- மூத்த பத்திரிகையாளர் திருமை பா.ஸ்ரீதரன்