விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய வேண்டும் குமாரசாமி உத்தரவு

விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு குமாரசாமி உத்தரவிட்டார்.

Update: 2018-06-02 23:52 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் பருவமழைக்கு முன்பு நல்ல மழை பெய்துள்ளது. இதுகுறித்து விவசாயம், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அந்த துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு விவரங்களை தாக்கல் செய்தனர். பின்னர் குமாரசாமி பேசியதாவது:-

கர்நாடகத்தில் பருவமழைக்கு முன்பு பெய்யும் மழை 51 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. மேலும் பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாகவே கர்நாடகத்திற்கு வந்துள்ளது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் விவசாயிகள் உழவு பணிகளை தொடங்கி நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் விதைகள், உரம் கொள்முதல் செய்வதில் எந்த தொந்தரவையும் அனுபவிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். இந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது தலைமை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்ய வேண்டும். தரம் குறைந்த விதைகளை வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு நான் இஸ்ரேலுக்கு சென்று அங்கு விவசாய பணிகள் குறித்து ஆய்வு செய்தேன்.

அங்கு தொழில்நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள். அதேபோல் கர்நாடகத்திலும் விவசாயிகள் தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியும். இது விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். மண்டியா மாவட்டத்தில் 900 ஏக்கர் பரப்பளவில், விசுவேஸ்வரய்யா கால்வாய் பண்ணை நிலத்தில் சோதனை அடிப்படையில் இஸ்ரேல் தொழில்நுட்ப பயன்பாட்டு திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளேன். இதுதொடர்பாக இஸ்ரேல் நாட்டில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்களை கர்நாடகத்திற்கு வரவழைத்து நமது விவசாயிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படும்.

தோட்டக்கலைத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இதனால் விவசாயிகள் பயன் பெறுவார்கள். கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ரத்னபிரபா, கூடுதல் தலைமை செயலாளர் பிரசாத் உள்பட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்