கடலூர் அருகே பரபரப்பு: முன்விரோத தகராறில் கணவன்-மனைவிக்கு அரிவாள் வெட்டு

முன்விரோத தகராறில் கணவன்-மனைவியை 11 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டினர்.

Update: 2018-06-02 23:15 GMT
கடலூர் முதுநகர், -

கடலூர் அருகே முன்விரோத தகராறில் கணவன்-மனைவியை 11 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டினர்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் முதுநகர் அடுத்த அன்னவெளி புதுக்குப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன். விவசாயி. இவருடைய மனைவி ஜோதி. இவர்களது மகன் திவாகர்பாபு (வயது 28).

கோவிந்தராஜன், தனது வீட்டின் அருகே உள்ள நிலத்தில் தர்பூசணி சாகுபடி செய்திருந்தார். அந்த நிலத்தில் விளைந்துள்ள தர்பூசணிகளை அதே பகுதி ராணி காலனியை சேர்ந்த சிவராமன், சக்கரவர்த்தி, அஜய் ஆகியோர் சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் இவர்களுக்கும், கோவிந்தராஜனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிந்தராஜன், அவரது மனைவி ஜோதி ஆகியோர் வீட்டின் வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்தனர். திவாகர் பாபு வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு நேரத்தில் 11 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கோவிந்தராஜன் வீட்டிற்கு வந்தனர். கண்இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்த கோவிந்தராஜன், ஜோதி ஆகியோரை சரமாரியாக தாக்கி, அரிவாளால் வெட்டினர். மேலும், வீட்டின் வெளியே இருந்த கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியது.

இந்த சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து திவாகர்பாபு வெளியே வந்தார். இதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர். வீட்டின் வாசலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய், தந்தையை பார்த்த திவாகர்பாபு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து திவாகர்பாபு கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்