எரித்து கொல்லப்பட்டவர், சென்னை இளம்பெண் பரபரப்பு தகவல்கள்

செங்கல்பட்டு அருகே எரித்து கொல்லப்பட்டவர் சென்னை இளம்பெண் என தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-06-02 22:42 GMT
செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த பழவேலி பகுதியில் கடந்த 28-ந்தேதி, இளம்பெண் ஒருவர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும், அங்கு விரைந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

எரித்துக் கொல்லப்பட்ட பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவர் கொலை செய்யப்பட்டதின் பின்னணி என்ன என்பது குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே கேரளாவை சேர்ந்த ஜேஸ்னா மரியா ஜேம்ஸ் என்ற கல்லூரி மாணவி மாயமான தகவல் வெளியானது. அவர்தான் எரித்துக்கொல்லப்பட்டு பிணமாக கிடந்தாரா என்ற கேள்வி எழுந்தது.

இதுபற்றி செங்கல்பட்டு போலீஸ் மூலம் தகவல் அறிந்த பத்தனம்திட்டா போலீசாரும், மாயமான மாணவியின் சகோதரர் ஜென்சனும், அவரது நண்பரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு பிண அறையில் பிரேத பரிசோதனை செய்யாமல் வைக்கப்பட்டு இருந்த பெண்ணின் உடலை பார்த்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பற்களில் கிளிப் பொருத்தபட்டிருந்தது. அதே போன்று மாயமான ஜேஸ்னா மரியா ஜேம்சும் பற்களில் கிளிப் பொருத்தி இருந்தார். மேலும், கொலை செய்யப்பட்ட பெண் மூக்கு குத்தி இருந்ததும், ஆனால் ஜேஸ்னா மரியா ஜேம்ஸ் மூக்கு குத்திக்கொள்ளவில்லை என்பதும் தெரியவந்தது.

இதன் அடிப்படையில் கொலை செய்யப்பட்ட பெண், தனது சகோதரி ஜேஸ்னா மரியா ஜேம்ஸ் இல்லை என்று ஜென்சன் கூறி விட்டார்.

இந்தநிலையில் கோயம்பேடு பஸ் நிலையம் அருகே ஒரு ‘மொபட்’ அனாதையாக நின்றது. அந்த ‘மொபட்’ குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அது சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அருள்தாஸ் என்பவரது மகளான பொக்கிஷ மேரிக்கு சொந்தமானது; அவர் கடந்த 26-ந்தேதி வேலைக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவரது தாயாரையும், உறவினரையும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்று, அங்கு பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை காட்டியபோது, அது மாயமான பொக்கிஷ மேரிதான் என்பது உறுதியானது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. தொடர்ந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்கல்பட்டு போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் நெற்குன்றம் செல்லியம்மன் நகர் ஆனித் தெருவை சேர்ந்த பாலமுருகன் (வயது 30), எம்.ஜி.ஆர், நகரை சேர்ந்த பழனி என்பவரது மகன் சுகுமாரன் (38) ஆகியோரை அண்ணாநகர் போலீசார் கைது செய்து, செங்கல்பட்டு தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தார்கள்.

போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிவில் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவரும்.

மேலும் செய்திகள்