ராஜராஜ சோழன்-லோகமாதேவி சிலைகளை பார்க்க குவியும் மக்கள் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

தஞ்சை பெரிய கோவிலில் வைக்கப்பட்டுள்ள ராஜராஜ சோழன்-லோகமாதேவி சிலைகளை பார்க்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Update: 2018-06-02 23:00 GMT
தஞ்சாவூர்,

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டினான். இந்த கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

இந்த கோவில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. தற்போது இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது.

இந்த கோவிலுக்கு 66 சிலைகள் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர தங்கத்தால் ஆன கொள்கைத்தேவர், ஷேத்திரபார் சிலையும், வெள்ளியினால் ஆன 4 வாசுதேவர் சிலைகளும், ராஜராஜ சோழன் தளபதி கிருஷ்ணராமன் கொடுத்த அர்த்தநாரீஸ்வரர் சிலையும் பெரியகோவிலில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தன. இந்த சிலைகளில் தங்கத்தினால் ஆன சிலைகள் உள்ளிட்ட பெரும்பாலான சிலைகள் திருடப்பட்டுள்ளன.

இதேபோல தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் 2½ அடி உயரம் உடைய ஐம்பொன் சிலையும், அவரது பட்டத்தரசியான லோகமாதேவியின் 2 அடிக்கும் குறைவான ஐம்பொன் சிலையும் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டுள்ளது. இந்த 2 சிலைகளின் மதிப்பும் ரூ.150 கோடி ஆகும்.

இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் மற்றும் குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது திருட்டு போன சிலைகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சாராபாய் அறக்கட்டளையின் காலிகோ அருங்காட்சியகத்தில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் குஜராத் சென்று உரிய ஆவணங்களை காட்டி 2 சிலைகளையும் மீட்டனர். இந்த சிலைகள் அங்கிருந்து சென்னை கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து கும்பகோணத்துக்கு எடுத்து வரப்பட்டு நேற்று முன்தினம் சிலைகளை கோர்ட்டில் ஒப்படைத்தனர். பின்னர் அந்த சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தஞ்சை பெரியகோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

பெரிய கோவிலுக்கு எடுத்து வரப்பட்ட சிலைகளுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சிலைகள் பெருவுடையார் சன்னதிக்கு எடுத்துச்செல்லப்பட்டன. 2 சிலைகளும் ஏற்கனவே இருந்த இடத்தில் வைக்கப்பட்டன. அந்த இடத்தில் இருந்த ராஜேந்திர சோழன் சிலை, அருகில் இருந்த தியாகராஜர் சிலை அருகே வைக்கப்பட்டன.

ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஜன்னல் கதவுகள் போடப்பட்டுள்ளன. அந்த கதவுகள் பூட்டப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. மேலும் அதன் அருகே துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 6 போலீசார் சுழற்சி முறையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன சிலைகள் மீண்டும் பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட தகவல் அறிந்ததும் அதனை பார்க்க ஏராளமானோர் பெரிய கோவிலுக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று காலை முதலே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வெளிநாட்டு பயணிகள் என அதிக அளவிலானோர் வந்து சிலைகளை பார்த்து சென்றனர். இதனால் பெரிய கோவிலில் நேற்று வழக்கத்தை விட பெரிய கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. 

மேலும் செய்திகள்